மழைக்காலத்தில் ஒருநாள்..
காலையில எந்திரிக்கும்போதே
மழை ச்சோ..னு பெய்யும்..
இப்போ லேசா மழை பெய்யுறதுக்கெல்லாம்
விடுமுறை விடுறமாதிரி
அப்போ விடமாட்டாங்க..
என்ன மழை பெஞ்சாலும்
பள்ளிக்கூடம் நடக்கும்..
அப்படி ச்சோ..னு மழை பெய்யும்போது
பள்ளிக்கூடம் போகணுமே..னு
கடுப்பு ஒருபக்கம் வந்தாலும்,
வகுப்புகள் அதிகமா நடக்காதுனு ஒரு மகிழ்ச்சியும்
'ஓரத்துல ஓடும்'...
என்னதான் மழைக்காலம்னாலும்
காலை சாப்பாடு
எங்க வீட்டுல பழையதுதான்..
அதற்கு தொட்டுக்கையாக
முதல்நாளது வத்தக்குழம்புதான்..
அதற்கிணை வேறெதுமில்ல..
சாப்பிட்டு முடிச்சிட்டு
புத்தகப்பைக்கு ஒரு ஜவுத்தாள் (plastic bag) கவர் போட்டு
சட்டைக்கு உள்பக்கமா வச்சிகிட்டு,
மறக்காம சாப்பாடு தட்டும் பைக்குள்ள எடுத்து வச்சிப்போம்..
தலைக்கு யூரியா சாக்கு (ஏழைகளின் Rain coat) இல்லைனா,
மஞ்சள் நிறத்துல இருக்கிற
பாமாயில் பாக்கெட்டை தலையில கூம்பு வடிவத்துல மாட்டிக்கிட்டு வீட்டுலேருந்து ஓட்டம் பிடிப்போம்...
போற வழியில ரோடு முழுசுக்கும் தண்ணி ஆறா ஓடும்..
அதுல கண்ணுமண்ணு தெரியாம தடதடன்னு ஓடுறப்போ
கால்ல நறுக்குனு கருவமுள் ஏறிடும்..
அதை புடுங்கிபோட்டுட்டு
ஒருமாதிரி காலை நொண்டிகிட்டே
ஓடி ஒருவழியா
பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்த்தா,,,
அப்பாடா..!
இன்னும் ரெண்டாம் பெல்லு அடிக்கலைனு சந்தோஷம் 'மனசுல மணியடிக்கும்'..
எல்லா பயலுகளும் வெளில நின்னுகிட்டு மழைல அதம் பண்ணிட்டு இருப்பானுங்க..
வகுப்புக்குள்ள நுழைஞ்சு மேல போட்டிருந்த யூரியா சாக்கை நல்லா உதறிட்டு மூங்கில் பிளாச்சுகளால் அமைந்த வகுப்பு சுவருல தொங்கவிடணும்..
கான்கிரீட் கட்டிடமெல்லாம் ஒன்பதாம் வகுப்புக்கும்
பத்தாம் வகுப்புக்கும்தான்..
எல்லா பொண்ணுகளுக்கும் நம்மளை பிடிக்கும்ன்றதால அதுங்களை பார்த்து சிரிச்சிகிட்டே,
நம்ம பசங்கிட்ட போகலாம்னு பார்த்தா
அதுக்குள்ள ரெண்டாம் பெல் அடிக்கும்..
எல்லா பயலுகளும் உள்ளவந்து அவனவன் இடத்துல உட்காருவோம்..
முதல் வகுப்பே கணக்குபாடம்..!
கணக்கு சார் வரலைனா முக்காவாசி பேருக்கு கொண்டாட்டந்தான்..
மீதி கால்வாசிப்பேருல நானும் ஒருத்தன்..
ஏன்னா கணக்கு சார் எம்மேல பிரியமா இருப்பாரு..
கணக்கு சார் வரமா போய்ட்டா,
வகுப்பு முழுக்க ஒரே சத்தம்தான்..
வீட்டுலதான் ஒழுகுதுனு பார்த்தா வகுப்புலயும் அங்கங்க ஒழுகும்..
வகுப்புலேருந்து பார்த்தா
பள்ளிக்கூடத்து சமையல்கட்டு தெரியும்..
அந்த கூரையிலேருந்து புகை வந்துச்சின்னா
மதிய சாப்பாடு செய்ய
ஆரம்பிச்சிட்டாங்கனு அர்த்தம்..
வயிறு அப்பவே லேசா
'வாயை பிளக்கும்'..
ஒரு வழியா ரெண்டு வகுப்பு முடிஞ்சதும்
விளையாட்டு மணியடிக்கும்..
பள்ளிக்கூடத்துக்கு வெளியில 'அந்த ஆத்தா'
கடை வச்சிருக்கோ என்னவோ தெரியலையேனு பார்த்தா,
அந்த ஆத்தாவும் ஒரு சாக்கை மேல போட்டுகிட்டு உட்கார்ந்திருக்கும்..
பசங்களோட கூட்டமா போயி
குனிஞ்சி நின்னு என்ன மிட்டாய் வாங்கலாம்னு யோசிச்சிகிட்டே..
'கால்சட்டைல கைவிட்டா',
ஒரு கால்ரூவா இருக்கும்..
அதுக்கு என்ன வாங்கலாம்..?
ஹார்லிக்ஸ் மிட்டாயா..?
கமர்கட்டா..?
சூட மிட்டாயா..?
எலந்த ஜூஸா..?
இல்ல பால்பன்னா..?
சரி..
ஹார்லிக்ஸ் மிட்டாயே வாங்குவோம்னு வாங்கிகிட்டு
திரும்பவும் வகுப்புக்கு போனா,
வகுப்பு வாசல்ல நம்ம பொண்ணுங்க எல்லாம் சில்லிக்கோடு விளையாடுங்க...
அதை வேடிக்கை பார்த்துகிட்டே,
'நமக்கு பிடிச்ச பொண்ணு'
அவுட்டானதும்
அந்த கடுப்புல உள்ள வந்து உட்கார்ந்தா...
அப்பதான் 'அது' வரும்..
ஓடிபோயி 'அடிச்சிட்டு' திரும்பவந்தா
அதுக்குள்ள மூனாம் பீரியடுக்கு பெல் அடிப்பாங்க..
டொய்ங்.. டொய்ங்.. டொய்ங்..
மழை அப்போ செமையா வலுக்க ஆரம்பிச்சி
வகுப்புல எங்க பார்த்தாலும் ஒழுக ஆரம்பிச்சிடும்..
அப்பதான் அறிவியல்சார் வருவாரு..
வகுப்பு ஒழுகுறதைப் பார்த்துட்டு
எல்லாரும் பக்கத்துல இருக்குற B-கிளாஸ்ல உட்கார சொல்லுவாரு..
அங்கபோனா,
மண்தரையெல்லாம் ஈரமா நசநசன்னு இருக்கும்..
அதைவிட அந்த கிளாஸ் பசங்க நம்மளை பார்ப்பானுங்க ஒரு பார்வை..!
அவ்வளவு கேவலமா பார்ப்பானுங்க..!
உட்காருவதற்கு ஒரு பயகூட இடந்தரமாட்டான்..
அந்தக்கடுப்புல கீழ உட்காருவோம்..
அப்ப நம்ம பொண்ணுங்க உட்கார்ந்துருக்கிற இடத்தில ஒரே கத்தல்..
என்னான்னு பார்த்தா..!
மரவட்டை..
அதுக்கா இந்த கத்தல்..?
இந்த பொண்ணுங்களுக்கு
எப்படித்தான் இப்படி
அல்ட்டிக்க முடியுதோ
தெரியலைனு,
அதுங்களை கிண்டல் பண்ணிக்கிட்டே
பேசிட்டு இருந்தா ரெண்டு பீரியட் முடிஞ்சிடும்...
அப்போ, இன்னைக்கு என்ன கிழமைனு யோசிச்சா,
அட.. வியாழக்கிழமை..!
இன்னைக்கு முட்டை போடுவாங்களே..
விறுவிறுனு போயி
தட்டை கழுவலாம்னு பார்த்தா,
அங்க எவனோட தட்டை
எவனோ தட்டிவிட்டுட்டான்னு
சண்டை நடக்கும்..
ஒருவழியா சண்டை முடிஞ்சி
தட்டை கழுவிட்டு சாப்பாடு வாங்க
வரிசைல நின்னா
அப்போதான் ஒருத்தவன் இடையில் புகப்பார்ப்பான்..
அவனை அடிக்காதகுறையா
வெளில தள்ளிவிட்டுட்டு
கஷ்டப்பட்டு சாப்பாடும் முட்டையும் வாங்குனா,
நம்ம முட்டை மட்டும் ஓரத்துல கொஞ்சம் காணாம போயிருக்கும்..
அந்த கடுப்புல அடுத்தவன்
முட்டைய பார்த்தா முழுசா,
பெருசாவேற இருக்கும்..
ஒருவழியா மனசை தேத்திக்கிட்டு
சாப்பிடுறதுக்கு உட்கார்ந்தா
நம்மளை சேர்த்து வட்டமா
நம்ம பசங்களாம் உட்கார்ந்து சாப்பிடுவோம்..
இதுதாங்க நெசமாவே சொர்க்கம்..!
சாப்பிட்டு முடிச்சிட்டு
அது சாம்பாரா, ரசமானு தெரியாம
எதுவாயிருந்தாலும் பரவாயில்லைனு
தட்டைத் தூக்கி அதை உறிஞ்சி குடிச்சிட்டு
திரும்ப தட்டு கழுவ போனா
மழை புடிச்சிக்கும்..
அதுகெடக்கு போ..ன்னு
அந்த மழையிலேயே கையும் தட்டும் கழுவிட்டு,
தட்டை மழையில நீட்டுனா...
கொஞ்சநேரத்துல தட்டு நிரம்பிடும்..
அந்த மழைத்தண்ணி உண்மையிலேயே அமிர்தம்ங்க...
அப்புறமா,
எல்லா வகுப்பும்
முடிஞ்சி சாயுங்காலமா வீட்டுக்கு கிளம்புவோம்..
திரும்பவும் யூரியா சாக்கு.. அதே தடதட..
வீட்டுக்குள்ள போனா தரையெல்லாம் தண்ணி நிக்கும்..
பையை ஒரு ஆணில மாட்டுனா, உள்ளேயிருந்து அம்மா..
டேய்..
அந்த கடைசி வீட்டுல முருங்க மரம் விழுந்துட்டாம்..
போயி கொஞ்சம் கீரை பறிச்சிட்டுவாடானு சொல்லுவாங்க..
ம்க்கும்..னு மெதுவா அலுத்துக்கிட்டே அங்கபோனா,
ஊரே அங்க நிக்கும்..
ஒருவழியா இடுக்குல புகுந்து போயி கைகொள்ளாத
அளவுக்கு
கீரைய பறிச்சிகிட்டு வீட்டுக்கு வந்தா, அப்பா நமக்காக
பட்டாணி வாங்கிட்டு வந்துருப்பாங்க..
அதை கொறிச்சிகிட்டே உட்கார்ந்திருப்போம்..
ஒருவழியா சாப்பாடு செஞ்சி முடிச்சதும்
சாப்பிட்டுட்டு
தரையில சாக்கை விரிச்சிட்டு அதுமேல
பாயை போட்டு தூங்கிப்போவோம்..
ச்சே..
அப்படியே இருந்திருக்கலாம்..
- பாலா ஃபீனிக்ஸ்
"நினைவுகள்"