இந்த விடைத்தாள் ரோகிணியுடையவை. அவள் தற்போது நம்மிடையே இல்லை. 16 வயதிலேயே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாள். அவள் மரணத்துக்குக் காரணமானவர்களைக் காப்பாற்ற அரசுத் தரப்பு வழக்கறிஞரே அனைத்து முயற்சிகளும் செய்தார். என்ன விவரம் அது?
அவள் பெயர் கோமதி. அவளுக்கு படிக்கவேண்டும் என்று நிறைய ஆசை…. குடும்பத்தில் வறுமை தாண்டவமாடினாலும், அவளை ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்கிறார்கள். நன்றாகப் படித்து ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாம் என்ற கனவோடு அவள் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவசர அவசரமாக திருமணம் ஏற்பாடு செய்கிறார்கள். 'நான் படிக்கணும்…. ஸ்கூலுக்குப் போகணும்' என்று அழுது அடம் பிடிக்கிறாள். 'கல்யாணம் பண்ணிக்கிட்டு ஸ்கூலுக்கு போலாம்மா… உன்னை யாரு தடுத்தது' என்று பெற்றோரும் உற்றாரும் சொல்லிய சமாதானத்தை அவள் நம்புகிறாள். 'தாலி மட்டுத்தானே.. அதை ஒளிச்சு மறைச்சுட்டு ஸ்கூலுக்குப் போலாம்' என்று அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டு திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். திருமணத்துக்கு மறுநாள், அவள் சீருடை அணிந்து பள்ளிக்குக் கிளம்புவதைப் பார்த்து அவள் பெற்றோரும், உறவினர்களும் சிரித்தபடியே இனி பள்ளிக்குக் செல்ல முடியாது என்று கூறுகின்றனர். கருக்கப்பட்ட தனது கனவுகளை மனதில் சுமையாக ஏற்றிக் கொண்டு தன் புதிய வாழ்க்கையை பழகிக் கொள்வதற்குள் குழந்தைகள்.
நம்மால்தான் படிக்க முடியவில்லை… நமது பிள்ளைகளையாவது நன்றாக படிக்க வைப்போம் என்ற ஆசையோடு இருந்தவளுக்கு பிறந்த பெண்தான் ரோகிணி.
துறுதுறுவென்று ஒடியாடித் திரிந்தவளை, கான்வெண்ட்டில் படிக்க வைக்க தாய் விரும்புகிறாள்.கணவனுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை. சிறுநீரகத்தில் பெரிய கோளாறு. மருத்துவ செலவு செய்வதா…. மகளைப் படிக்க வைப்பதா என்ற குழப்பம். ஆனால், கோமதி தெளிவாக இருந்தாள். மகளைப் படிக்க வைத்தே ஆக வேண்டும். தன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செய்த பொருளுதவியால், எப்படியோ தட்டுத் தடுமாறி குடும்பத்தை ஓட்டுகிறாள். மகளை பொன்னேரியில் உள்ள ஸ்ரீ மாதாஜி பள்ளியில் சேர்க்கிறாள். மகள் ரோகிணியோ, பள்ளியே வியக்கும் வகையில் படிக்கிறாள். ஆறாம் வகுப்பு சேர்த்ததும் தடுமாறியவள், ஏழாம் வகுப்பு முதல், தொடர்ந்து முதல் ரேங்க். மற்ற மாணவ மாணவியருக்கு அவளே முன்னுதாரணமாகத் திகழ்ந்தாள்.
இதற்கிடையே பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்றன. ரோகிணி, ஸ்ரீ மாதாஜி பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெறுகிறாள். அவளைப் பெற்ற கோமதிக்கோ பெருமை பிடிபடவில்லை. ரோகிணியை கட்டிப்பிடித்து உச்சி முகர்கிறாள். ரோகிணியோ… இதெல்லாம் என்னம்மா…. நான் படிச்சி… கலெக்டராகிக் காட்றேன் பாரு… அப்போ உன்னை வண்டியிலேயே கூட்டிட்டுப் போவேன் என்கிறாள்.
ப்ளஸ் ஒன் எந்த பள்ளியில் சேர்க்கலாம் என்று குழப்பம் ஏற்படுகிறது. , ரோகிணியே நான் பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்கிறேன் என்கிறாள். ஏற்கனவே என்னோடு ஸ்பெஷன்ல் கிளாஸில் படித்தவர்கள் அங்கே உள்ளார்கள், அதனால் நான் அங்கேயே படிக்கிறேன் என்கிறாள். அவள் விருப்பப்படியே, பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்க்கிறாள். அவளுக்கு டொனேஷன் எதுவும் இல்லை. பள்ளியிலேயே முதல் மாணவியாயிற்றே… அவளை சேர்த்துக் கொள்ள பள்ளிகள் போட்டி போடாதா ?
பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி வள்ளுர், அத்திப்பட்டில் இருக்கிறது. ரோகிணி வீட்டிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரம். தினமும் ரயிலில் பள்ளிக்குச் செல்வாள் ரோகிணி. பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாக ரோகிணி தேர்ச்சி பெற்றதால், அவளின் புகைப்படத்தை பள்ளி ப்ளெக்ஸ் போர்டு போட்டு பெருமையாக பறைசாற்றுகிறது. ஆனால், அதுவே அவளுக்கு பெரும் தலைவலியாக அமைகிறது. ரயில் நிலையத்தில் விடலைப்பருவ வாலிபர்கள், தொடர்ந்து ரோகிணியை கிண்டல் செய்கிறார்கள். என்னைக் காதலிக்கிறாயா…. நீ அழகா இருக்க…. என்னைக் கல்யாணம் பண்ணிக்க… என்ற ரீதியில் இந்தக் கிண்டல் தொடர்கிறது. 16 வயதுப் பெண்ணான ரோகிணிக்கு அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. தன் பெற்றோரிடம் சொல்லி முறையிடுகிறாள். அவர்கள் அவள் பள்ளியிலேயே அவளோடு படிக்கும் பார்த்திபன் என்ற இளைஞனிடம் சொல்லி, ரோகிணியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்கின்றனர்.
ரோகிணியின் பெற்றோர் சொல்லியபடி, பார்த்திபன், ரோகிணியை தினமும் ரயில் நிலையத்திலிருந்து கூட்டிச் செல்வது, அனுப்பி வைப்பது என்று கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறான். ரோகிணி, பார்த்திபனை அண்ணன் என்றே அழைக்கிறாள். கூடப் பிறந்த தங்கை இல்லாததால், ரோகிணியை பார்த்திபன் சொந்தத் தங்கையாகவே பார்த்துக் கொள்கிறான். ரோகிணியின் தாய் கோமதியும், பார்த்திபனை மகன் போலவே பார்த்துக் கொள்கிறாள். ரோகிணிக்கு உணவு கட்டுகையில், பார்த்திபனுக்கும் சேர்த்து உணவு கட்டுவது… ரோகிணி வரத் தாமதமானால் பார்த்திபனை போன் செய்து தொந்தரவு செய்வது என்று சிறப்பாகவே இவர்கள் வாழ்வு போய்க் கொண்டிருக்கிறது.
மக்கள் நலப்பணியாளர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியதன் மூலம் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த ரோகிணியின் தந்தையின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள். இருந்த ஒரே வேலையும் போனதால், ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத ரோகிணியின் தந்தை ஞானரத்தினம் வேலை தேடிக்கொண்டே இருக்கிறார்.
அம்மா இந்த வீட்ல ஒரே ரூம்தாம்மா இருக்கு… நம்ப வேற வீட்டுக்கு போலாம்மா என்கிறாள். எல்லாப் பசங்களும் சாப்பிட நெறய்ய எடுத்துட்டு வர்றாங்கம்மா…. நீ எனக்கு சாப்பாடு மட்டும்தான் கட்டிக் குடுக்கற… வேற எதுவும் குடுக்க மாட்ற.. அப்பாக்குதான் நல்ல வேல கெடச்சுடுமே… எனக்கு ஸ்கூலுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் குடும்மா என்று தொண தொணவென்று பேசிக்கொண்டே இருக்கிறாள். குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது..
மறுநாள் பள்ளிக்குச் சென்று விட்டு, வீடு திரும்புகையில் வழக்கம் போல தன் அண்ணன் பார்த்திபனோடு ரயில் நிலையத்தில் அமர்ந்து, அவள் அம்மா கட்டிக் கொடுத்த உணவை சாப்பிடுகிறாள் ரோகிணி. அப்போது ரயிலில் சென்ற தமிழ் ஆசிரியர் செந்தில், ரோகிணியையும், பார்த்திபனையும் பார்க்கிறார். உடனே பள்ளியின் தாளாளர் மணிவண்ணனிடம் இந்த விபரத்தை தொலைபேசியில் தெரிவிக்கிறார்.
மணிவண்ணன் சற்று நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வருகிறார்.
"உங்களுக்கு லவ் பண்ண இதுதான் இடமா… ? வேற எடம் கெடைக்கலயா… இந்த வயசுலயே உனக்கு ஆம்பளை தேடுதாடி…" என்று கத்துகிறார்… பார்த்திபனின் தலையில் கொட்டுகிறார். உடனே அந்த இடத்தில் கூட்டம் கூடுகிறது. யாருய்யா நீ.. சின்னப்பசங்கள அடிக்கிற… என்று கேட்கிறார்கள். மணிவண்ணன், "நான் இவர்கள் படிக்கும் பள்ளியின் தாளாளர்… இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றேன்னு ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்காங்கன்னு கம்ப்ளெய்ன்ட் வந்துச்சு.. அதான் கையும் களவுமா பிடிக்கலாம்னு வந்தேன்.. இவங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டு படிக்க அனுப்பிச்சா… இதுங்க ஊரு மேயிது" என்கிறார். அவர் பள்ளியின் தாளாளர் என்று அறிந்ததும் கூட்டம், அப்படியே அவர் பக்கம் சாய்கிறது.. அங்கே இருந்தவர்கள்.. மொளச்சு மூணு எலை விடல… இவளுக்கு ……………. ……… என்று பேசுகிறார்கள். இதுங்கல்லாம் எங்க உருப்படப்போகுது… அப்பா அம்மாவ ஏமாத்திட்டு இந்த வயசுலயே… இதுங்களுக்கு…………………. கேக்குது. என்று பேசுகிறார்கள்…. இன்னொரு அம்மா "இப்படி ஒரு ஜென்மம்.. இதுங்கள்ளாம் உயிரோட இருக்கறதுக்கு ஓட்ற ட்ரெயின்ல குதிச்சு சாகலாம்" என்கிறார்.
ரோகிணி கூனிக்குறுகிப் போகிறாள். உண்மையிலேயே காதலித்திருந்தால், அவளுக்கு பெரிய அவமானமாக இருந்திருக்காது… அண்ணன் தங்கையாகப் பழகியவர்களை இப்படிப் பேசுகிறார்களே.. என்று புழுங்குகிறாள். மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தவள், நேராக படுத்து தூங்குகிறாள். இரவு சாப்பிடவில்லை. காலையில் எழுந்ததும், அவள் தங்கை சுவாதியிடம் என்னோட ட்ரெஸ்ஸையெல்லாம் நீ போட்டுக்க என்கிறாள். எதுவும் புரியாத அவள் தங்கை, சரி என்கிறாள். நேராக அவள் அம்மாவிடம் சென்று, "அம்மா உன்னை எப்பவவாது திட்டியிருந்தா கோச்சுக்காதம்மா" என்கிறாள்.. எதுவுமே புரியாத கோமதி, பயாலஜி க்ளாஸ் இருக்குன்னு சொன்னியே கௌம்புடி" என்கிறாள்.
ரயில் நிலையத்தில் பார்த்திபன் காத்திருக்கிறான். இருவரும் பொன்னேரி ரயில்நிலையத்தின் அருகே உள்ள ரயில்பாதை பாலத்தில் நடந்து செல்கிறார்கள். எதிரே ரயில் வருகிறது. ரோகிணி முன்னே செல்கிறாள். பார்த்திபன் பின்னே வருகிறான். ரயில் ட்ரைவர் சத்தமாக ஹார்ன் அடிக்கிறார். இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி கும்பிட்டபடி ரயிலை நோக்கி நடந்து செல்கிறாள் ரோகிணி. ரயில் அவள் மீது மோதி அவளை சின்னாபின்னமாக்குகிறது. அவள் பின்னே வந்த பார்த்திபன் பயந்துபோய் பாலத்தின் மேலிருந்து கீழே குதிக்கிறான். கீழே இருந்த பாறைகளில் சிக்கி அவன் கால் மற்றும் தொடை எலும்புகள் நொறுங்குகின்றன.
வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. பள்ளிச் சீருடையை வைத்து, பள்ளிக்குத் தகவல் அனுப்பப்படுகிறது. தாளாளர் மணிவண்ணன் வருகிறார். காவல்துறையினர் அவரை விசாரித்ததும், இவர்கள் இருவரும் காதலர்கள்… நான் கூட முந்தாநாள்தான் கண்டித்தேன்.. வீட்டில் காதலுக்கு அனுமதி தராததால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கூறுகிறார். தினகரனும், சன் டிவியும், காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்று செய்தி வெளியிடுகிறது.
ரோகிணியின் குடும்பம் அலங்கோலமாகி அழுது புலம்புகிறது. ரோகிணியின் பள்ளி நோட்டுக்களை எடுத்து மடியில் போட்டுக் கொண்டு அழுகிறாள் கோமதி. அப்போது அந்த நோட்டிலிருந்து ஒரு கடிதம் வந்து விழுகிறது.
"வாக்குமுலம் என்று தொடங்கும் அந்தக் கடிதம், எங்களுடைய சாவுக்கு எங்கள் பள்ளி Correspondent தான் முழுக்க முழுக்க காரணம். ஏனென்றால் எனக்கு ஒரு அண்ணன் இருந்தான். அவன் என் உடன் பிறக்காவிட்டாலும் உடன் பிறந்த பாசமான அண்ணன் போலத்தான் இருந்தான். …. என்று தொடங்கும் அந்தக் கடிதம், ரோகிணியின் மனவேதனையை வெளிப்படுத்துகிறது.
"எங்களுடைய சாவுக்கு Correspondent ஒருத்தர் மட்டுமே காரணம். எங்கள் சாவிற்குப் பிறகு அங்கே படிக்கும் மாணவர்களுக்கு ஒரு புதிய காலம் பிறக்க வேண்டும். Correspondentக்கு ஒரு நல்ல தண்டனை கிடைக்க வேண்டும். இனிமேல் அவர் யாரையும் இழிவுபடுத்திப் பேசக் கூடாது. பின்பு, அண்ணன் தங்கை என்று கூறிவிட்டு யாராவது காதல் செய்வார்களா ? அதைவிட அவமானம் வேறு எதுவும் இல்லை." என்று எழுதியிருக்கிறாள் ரோகிணி….
இதற்குப் பிறகு நடந்த கொடுமை,... இந்தக் கடிதம் காவல்துறையினரிடம் கொடுக்கப்பட்டதும், காவல்துறையினர் பள்ளியின் தாளாளர் மீது 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்கின்றனர்.
இந்த மணிவண்ணன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். அந்த முன்ஜாமீன் மனு, நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம் நீதிபதி சுந்தரேஷ், நான் முன்ஜாமீன் தர மாட்டேன், மனுவை தள்ளுபடி செய்யப்போகிறேன், அந்த மணிவண்ணன் ஒரு நாளாவது சிறையில் இருக்க வேண்டும் என்கிறார். இதனால் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த முன்ஜாமீன் மனுவை வாய்தா வாங்கிக் கொண்டே தள்ளிக் கொண்டு போகிறார்கள். இறுதியாக ஏப்ரல் இறுதி வாரத்தில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோடை விடுமுறைக்குப் பிறகு இந்த மனுவை ஒத்தி வையுங்கள் என்று நீதிபதியிடம் கேட்டு, மனு தள்ளி வைக்கப்படுகிறது. இந்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஏ.என்.தம்பிதுரை.
நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 2012 இறுதி கோடை நீதிமன்றமாக, ஜாமீன் வழங்கும் நீதிபதியாக அமர்கிறார் நீதிபதி அருணா ஜெகதீசன். அவரிடம் ஏற்கனவே நிலுவையில் உள்ள முன்ஜாமீன் மனுவை மறைத்து, புதிய முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்கிறார்கள். அவர் விசாரித்து விட்டு, பள்ளித் தாளாளர் மணிவண்ணனுக்கு முன்ஜாமீன் வழங்குகிறார். இந்த மனுவின் விசாரணையின்போதும் அரசுத் தரப்பில் வாதாடியவர், ஏ.என்.தம்பிதுரை.
சரி… ஏற்கனவே நிலுவையில் உள்ள முன்ஜாமீன் மனு என்ன ஆனது ? கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பழைய முன்ஜாமீன் மனு நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, மனுவை வாபஸ் வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்து வாபஸ் வாங்கிக் கொள்கிறார்கள்.
நீதிமன்ற வட்டாரங்களில் விசாரித்தால் இந்த மோசடியான முன்ஜாமீன் மனுவை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, தம்பிதுரைக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இது குறித்து மேலதிக விபரங்களை விசாரிக்க இயலவில்லை. ஆனால், இது குறித்து தன்னிடம் நேரடியாக புகார் வந்தும், இந்த முன்ஜாமீனை ரத்து செய்ய தம்பிதுரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற மர்மத்துக்கு அவர்தான் விடை சொல்ல வேண்டும்.
இந்தத் தம்பித்துரை தான் நீதிபதியாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்பது கடைசி முக்கிய செய்தி.
பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளை தூரத்தில் இருந்து எப்படி கவனித்து வர வேண்டும் என்பதற்கு இந்த சோகமான சம்பவம் ஒரு உதாரணம். இந்த சிறுமிகள் போல எண்ணற்ற சிறுமிகள் தங்கள் வாழ்வை தினம் தினம் பினம் தின்னிகளுக்கு இரையாக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
@சாங்கிய ரிஷி
