ஊரெங்கும் "லட்ச ரூபாய் கார்" நானோ பற்றியே பேச்சு. இதைப் பார்த்த நம்ம ஊர் அரசியல் கட்சித்தலைவருக்கு
திடீரென ஐடியா.
தனது பி.ஏ.விடம் சொல்ல, அவர் உடனே "ரத்தன் டாடா'வை செல்ஃபோனில் பிடிக்கிறார்.
"" ஹலோ "டாடாஜி' நமஸ்தே. நான்....''
"" தமிழ்நாட்டுல இருந்து பேசறீங்களா ? ''
"" ஆமா''
"" ஒரு கட்சித்தலைவரோட பி.ஏ தானே ?''
"" கரெக்ட் ! ''
"" அடுத்த எலக்ஷ்ன்ல இலவசமா வீட்டுக்கு ஒரு கார் கொடுக்கற ஐடியாவுல இருக்கீங்களா ?''
"" அட''
"" அதுக்காக என்னோட லட்ச ரூபாய் காருக்கு அக்ரிமெண்ட் போட நினைக்கிறீங்க ? ''
"" ஐயோ ! எப்படி "ஜீ' இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க ?''
"" புட்டும் வைக்கலை. பணியாரமும் வைக்கலை. நீங்க ரொம்ப லேட். ஏற்கனவே உங்க ஊர்ல இருந்து நாலு கட்சிக்காரங்க ஃபோன் பண்ணிப் பேசிட்டாங்க. ''
"" அடடா ! எப்போ ? ''
"" காரை அறிமுகம் செய்தேனே .... அன்னிக்கு நைட்டே.''
"" அடச்சே !''
"" இன்னும் கேளுங்க. இந்தக் காரை தயாரிக்கணும்னு எனக்கு எப்போ தோணுச்சு தெரியுமா ?''
"" பேட்டியில படிச்சேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி மழை ரோட்டுல நீங்க கார்ல போய்ட்டிருந்தீங்க. அப்போ டூ வீலர்ல ஒரு ஃபேமிலி போறதைப் பார்த்தீங்க. தவறி விழுந்தா என்ன ஆகறதுன்னு வருத்தப்பட்டீங்க. அப்போ ஏழை மக்களுக்கு கார் தயாரிக்கிற எண்ணம் வந்தது.''
"" கரெக்ட். அப்படி நான் நினைச்சு முடிச்ச மூணாவது நிமிஷம் ஒரு ஃபோன். உங்க ஊர் தலைவர் பேசினார். அடுத்த எலக்ஷன்ல அந்தக் காரை இலவசமா கொடுக்கறதா சொன்னார்.''
"" ஆ ! அப்போ அக்ரிமெண்ட் முடிஞ்சு போச்சா ? ''
"" கவலைப்படாதீங்க. அதைவிட குறைஞ்ச விலையில ஹெலிகாப்டர் செய்து தரேன். நீங்க அதை இலவசமா கொடுங்க. காலை நீட்டிப் படுக்கக் கூட இடம் இல்லாத ஜனங்க, காரைக் கொடுத்தா எங்கே பார்க் பண்ணுவாங்க ?''
"" ஹலிகாப்டரை பார்க் பண்றதுக்கு மட்டும் இடம் வேண்டாமா ? ''
"" அதுக்கு வேற ஐடியா இருக்கு. ஒரு பட்டனைத் தட்டினா இருபதடி உயரத்துல ஹெலிகாப்டர் அந்தரத்துல லேண்ட் ஆகற மாதிரி தயாரிக்கப்போறேன். ஓ.கே.வா ?''
"" தலைவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டேச் சொல்றேன் ''
"" சீக்கிரம் சொல்லுங்க. என்னோட இன்னொரு செல்ஃபோன் ரொம்ப நேரமா அடிக்குது. நம்பரைப் பார்த்தா உங்க ஊருதான்னு தெரியுது. அப்புறம் அவங்களுக்கு ஹெலிகாப்டரைக் கொடுத்துடுவேன்.''
"" அவசரப்படாதீங்க. லைன்லயே இருங்க. தலைவர்கிட்டே பேசிட்டு உடனே சொல்றேன்.''
"" சீக்கிரம் ! சீக்கிரம் ! ''
"" ஜீ, தலைவர் ஓ.கே. சொல்லிட்டார். அந்த ஹெலிகாப்டர் எவ்வளவு ஆகும் ? ''
"" எழுபதாயிரத்துக்குத் தர்றேன் ''.
"" ஜீ ! இப்ப உங்களுக்குப் பக்கத்துல யாருமில்லைதானே ?''
"" இல்லை. ஏன் ? ''
"" எழுபதாயிரம்னு அக்ரிமெண்ட் போட்டுக்குவோம். ஆனா ஐம்பதாயிரத்துல தயாரிக்கறாங்க. மிச்சம் இருபதுல பத்து உங்களுக்கு, பத்து எங்களுக்குன்னு பிரிச்சுப்போம்.''
" ஐம்பதாயிரத்துல எப்படி ஜீ தயாரிக்கறது ?
" ஒரு சக்கரத்தைக் குறைச்சுடுங்க. மேலே வேஸ்டா சுத்தற ஃபேனை சின்ன சைஸ்ல பண்ணிடுங்க. சீட்டுங்க உள்ளே பஞ்சுக்குப் பதிலா பழைய துணிகளை வெச்சுத் தச்சுடலாம்.பட்டன்கள் சைஸையும் சின்னதாக்கிடலாம்.எப்படி ஐடியா ? ''
"" அடேங்கப்பா ! எல்லாரும் லட்ச ரூபாய் காரைத் தயாரிச்சுட்டேன்னு என்னைப் பாராட்டினப்ப கொஞ்சம் கர்வப்பட்டுட்டேன். ஆனா, உங்க ஊர் அரசியல்வாதிங்ககிட்டே பேசினதும் கர்வம் தூள் தூளாயிடுச்சு. நீங்க நினைச்சா ஆயிரம் ரூபாய்ல ஏரோப்ளேனே செய்வீங்க. உங்களை ஜெயிக்க என்னால முடியாது. ஆளை விடுங்க சாமி.''
- நன்றி கல்கி.
Relaxplzz