அப்பா!
2000.
அப்போது நான் I.T.I.முடித்துவிட்டு காரைக்காலிலிருந்த சுப்பீரியர் ரீவைண்டிங் கடையில்
வேலைக்குச்சேர்ந்திருந்தேன்.
சம்பளம் நாளொன்றுக்கு பத்துரூபாய்.
I.T.I.இல் டபுள் ஸ்பீடு லேத்மோட்டார்களையெல்லாம் நான் ரீவைண்ட்செய்ததுண்டு.
ஆனால் அதற்கெல்லாம் அந்தக்கடையில் வேலையில்லை.
சுகுனா மோட்டாருக்கு பெயிண்ட்டடிக்கவேண்டும்.
இல்லையேல் கடைக்காரரின் நண்பர்களெவரேனும் வந்தால் டீவாங்கிவரவேண்டும்.
படிப்பிற்கும் அனுபவத்திற்குமுள்ள பாரதூரத்தை அளவெடுத்துப்பார்த்தது அங்கேதான்.
அப்பா ஒரேயொருமுறை அந்தக்கடைக்குவந்தார்கள்.
நான் அப்போது எதோவொருமோட்டாருக்கு 'ரெட்-ஆக்ஸைட்'அடித்துக்கொண்டிருந்தேன்.
கடைக்காரர் வெளியேபோயிருந்தார்.
"என்னடா..
காயில்சுத்துறவேலைனு சொன்னே!"
"இல்லப்பா.. மோட்டார்வேலைனா எல்லாமேதானப்பா."
அப்பாவிற்கு ஏமாற்றமாயிருந்திருக்கவேண்டும்.
எனக்கு நினைவுதெரிந்தநாளிலிருந்து நான் ஆசிரியராகவேண்டுமென்பதே என் விருப்பமாயிருந்தது.
அப்பாவிற்கு அப்படியல்ல.
நான் சீக்கிரமாக ஏதாவதொருவேலைக்குப்போகவேண்டுமென்பதுதான் அவர்களதுவிருப்பம்.
ஏனெனில் அப்பாவின் நிலையப்படி.
சிறுவயதிலிருந்தே சைக்கிள்மிதித்தேவாழ்க்கையையோட்டியதால்
கழுத்தெலும்புகள் தேய்ந்துபோய் அடிக்கடி மயக்கம்வந்துவிடும்.
வயதுக்குவந்த இரண்டுமகள்கள்.
கடைக்குட்டியாக நானொரு நோஞ்சான்பிள்ளை.
அப்பாவின் எதிர்பார்ப்பெல்லாம் என்னுடையவளர்ச்சியாகத்தானிருந்தது.
உறவுகளின் புறக்கணிப்பு அப்பாவின் எதிர்பார்ப்புகளுக்கு நங்கூரமிட்டிருக்கவேண்டும்.
கடைக்காரர் வந்துவிட்டிருந்தார்.
"அண்ணே.. இவங்கதான் எங்க அப்பா."
"வாங்க.
பையன் நல்லாவேலைசெய்யிறான்."
அப்பாவிற்கு சின்னசந்தோஷம்.
போகும்போது கடைக்காரரிடம் சொல்லிச்சென்றார்கள்.
"பய நல்லா வைண்டிங்பண்ணுவான் சார்"
அப்பா பார்த்தபோது நான் அடித்துக்கொண்டிருந்த 'ரெட்-ஆக்ஸைட்' அப்பாவின் மனதை அரித்திருக்கவேண்டும்.
அன்றிரவு கேட்டார்கள்.
சொந்தமா ஒயரிங்வேலைக்குப்போகணும்னா எவ்வளவுடா செலவாகும்?"
"அப்பா.. அதுக்கு நிறைய டூல்ஸ்வாங்கணும்ப்பா.
பொறுமையா வாங்கிப்போம்ப்பா."
I.T.I.தேர்வுமுடிவு வந்தது.
93.42விழுக்காட்டுடன் முதல்மதிப்பெண்பெற்றுள்ளதாக என் நண்பன் ஜோஸப் அப்பாவிடம் தெரிவித்திருந்தான்.
நான் வழக்கம்போல கடைவேலையைமுடித்துவிட்டு
ஒன்பதரைக்கு பஸ்ஸேறி பத்தேகாலுக்கு வீட்டிற்குள் நுழைந்தபோது
அப்பா சிரித்துக்கொண்டே வாசலைத்திறந்தார்கள்.
மதிப்பெண்களைச்சொன்னபோதுதான்
அன்றுதான் ரிஸல்ட் என்று நினைவுக்குவந்தது.
எனக்கும் சின்னசந்தோஷந்தான்.
ஏனெனில் பத்தாம்வகுப்புத்தேர்வில் அப்பாவின் எதிர்பார்ப்பை ஏமாற்றியிருந்தவெனக்கு
அது ஆறுதலைக்கொடுத்திருந்தது.
புதுவைமாநிலத்திலேயே முதற்பயிற்சிமாணவனாகத்தேறியிருந்ததால்,
அடுத்ததாக அனைத்திந்தியயூனியன்பிரதேஸளவிலான பொதுத்தேர்வுக்காக
புதுவைமாநிலத்தின் சார்பாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன்.
நன்றாய் நினைவிருக்கிறது.
அது நவம்பர்மாதத்தின் மழைநாளின் மாலைப்பொழுது.
ரீவைண்டிங்கடையில் பதினைந்துநாள்விடுப்புசொல்லிவிட்டு
தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருந்தேன்.
அடுத்த இரண்டுநாட்களில் டெல்லிக்குப்பயணமாகவேண்டும்.
போக்குவரத்து மற்றும் சாப்பாட்டுசெலவுகளை அரசாங்கமேயேற்றுக்கொண்டதால்
பெரிதாகசெலவேதுமில்லை.
இருந்தாலும் கைசெலவுக்குக்கூட பணமில்லாமலிருந்தேன்.
ஆனால் அதைப்பற்றியெல்லாம் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை.
மாலை ஆறோ ஆறரையோ..
"உங்கப்பா மயக்கம்போட்டுவிழுந்துகெடக்காங்க தண்ணீடேங்க்கிட்ட.."
நன்றாய் நினைவிருக்கிறது.
அந்திமழை.
அப்பாவை அவரது நண்பர்களிரண்டுபேரும் தூக்கியதுபாதி இழுத்ததுபாதியாக
வீட்டிற்குகொண்டுவந்துகொண்டிருந்தனர்.
நான் அதற்குள் அக்ராஹரத்தின் பாதியைக்கடந்திருந்தேன்.
அப்பாவின் கால்கள் தார்ரோட்டில் இழுபட்டுக்கொண்டிருந்தன.
நான் கால்களைத்தூக்கிப்பிடித்துக்கொண்டேன்.
வீடுவந்தது.
ஒருமணிநேரத்திற்குப்பிறகு அப்பாவை ஆட்டோவிலேற்றிக்கொண்டு
தேனூர்மருத்துவமனைக்குச்சென்றோம்.
அந்தவொருமணிநேரத்தில்
இருநூறுரூபாயைமட்டுமே புரட்டமுடிந்தது.
ஆட்டோவிற்கு நாற்பதுரூபாய்போக
மீதிப்பணத்தை வைத்துக்கொண்டிருந்தேன்.
அப்பாவிற்கு நினைவுவந்தது.
புரடியெலும்பின் தேய்மானாத்தால்தான் இப்படி அடிக்கடிமயக்கம்வருகிறதென்று மருத்துவர் கூறினார்.
"நான் டெல்லிக்குப்போகலப்பா.."
அப்பாவால் சரியாக பேசமுடியவில்லை.
கையாலேயே சைகை.
அப்படிச்சொல்லக்கூடாது .
அடுத்தநாள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குவந்தோம்.
அன்றுமாலையே டெல்லிபயணம்.
கையில் எண்பதுரூபாய் மிச்சமிருந்தது.
நண்பன் தியாகுவின் வீட்டில் நூறுரூபாய்கொடுத்தார்கள்.
எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
காரைக்காலிலிருந்து நாகூருக்குச்சென்று
அங்கிருந்து ட்ரெயின்மூலமாக சென்னைக்கும் பின்னர் அங்கிருந்து டெல்லிக்கும் பயணமென திட்டமிட்டிருந்தனர்.
எங்கள் கிராமத்தின் பேருந்துநிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன்.
தூரத்தில் அப்பா நடந்துவருவதுமாதிரிதோன்றியது.
அப்பாவேதான்.
அப்பாவின் கையில் நூற்றைம்பது ரூபாய்.
"டெல்லியில குளிர் அதிகமாயிருக்குமாம்டா..
காரைக்கால்ல ஒரு தண்ணீசுடவைக்குற ஹீட்டர்வாங்கிக்க."
ஏதுப்பா காசு என்று கேட்கவில்லை.
அதைக்கேட்டு அப்பாவை சங்கடப்படுத்தவும்விரும்பவில்லை.
யாரிடமோ கடன்வாங்கியிருக்கக்கூடும்.
பேருந்துவந்துகொண்டிருந்தது.
"போய்ட்டுவரேன்பா..."
காரைக்கால்வருவதற்குள் மழை வலுக்கத்தொடங்கியது.
காற்றும் மழையுமாகவிருந்ததால்
நாகூர்-சென்னை ட்ரெயின் போகவில்லை.
அன்றிரவு காரைக்காலிலேயே ஆசிரியரொருவரின் வீட்டில் தங்கிவிட்டு
மறுநாட்காலை பேருந்துமூலமாக சென்னைக்குச்செல்வதாக ஏற்பாடாயிற்று.
காரைக்காலிலிருந்து என்னுடஞ்சேர்த்து ஐந்துமாணவர்கள் ஐந்தாசிரியர்கள்.
புதுவையிலிருந்து மூன்றுமாணவர்களும் மூன்றாசிரியர்களும்.
ஹீட்டர்வாங்கிவைத்துக்கொண்டேன்.
நூற்றியெண்பதுரூபாய்வந்தது.
கையில் மீதமிருக்கும் நூற்றைம்பதுரூபாயுடன் டெல்லிபயணம்.
விடியற்காலையில் PT&TDC (இப்போது PRTC) பேருந்து
நண்டலாற்றைத்தாண்டும்போது தொண்டைக்குழிக்குள் ஏதோவொரு பந்து.
முதன்முறையாக வீட்டைப்பிரிந்து நெடுந்தூரப்பயணம்.
அப்போதுதான் ஆசிரியரொருவர் கேட்டார்.
"என்னடா... ஷூபோட்டுட்டுவரலையா?"
அப்போதுதான் எல்லோரதுகால்களையுங்கவனித்தேன்.
"அதெல்லாம் பார்த்துக்கலாம் சார்".
ஒருவழியாக சென்னைவந்து அன்றிரவு 10:30க்கு தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்.
முதன்முறையாக ட்ரெயினில் காலடியெடுத்துவைக்கிறேன்.
மூன்றிரவுகள் இருபகல்களுக்குப்பிறகு டெல்லி...!
ரயில்வேஸ்டேஷனிலிருந்து ஒருமணிநேரப்பயணம்.
புஸா.
நாங்கள் தேர்வெழுதவேண்டியமையம்.
அங்கேயே விடுதி.
விடுதியில் விருதுநகரைச்சேர்ந்தவர்தான் சமையற்காரர்.
மற்றபடி எல்லாமே ஹிந்தி.
பான்பராக்வாசம்..
குளிர்..
இன்னும் குளிர்..
உதட்டில் தேங்காயெண்ணெய்.
அவ்வளவுதான்.
வந்திறங்கியவுடன் எங்கள்வீட்டிற்கு எதிர்வீட்டிலுள்ளவீட்டிற்கு ஃபோன்செய்தேன்.
தேர்வெழுதினோம்.
என்னுடையபிரிவிற்குமட்டும் பதினேழுபேர்.
அவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் ஆங்கிலம்வரவில்லை.
அதற்காக எனக்கு ஆங்கிலம் அத்துப்படியென்றுபொருளில்லை.
ப்ராக்டிக்கல் எக்ஸாமின்போது Vivaகேள்விகள்.
IGNOUவின் பெண் ப்ரொஃபஸர்தான் External Examinar.
எனக்குமட்டும் ஆங்கிலத்திற்கேள்விகேட்டார்.
அது ஆங்கிலமென்று புரியவில்லை.
அவர் கிடுகிடுவென்றுகேட்டதால் அது ஹிந்தியென்று நினைத்துக்கொண்டேன்.
"madam.. I don't know hindi. Please ask your questions in English." என்று திக்கித்திக்கிச்சொன்னேன்.
அவர் பலமாய்ச்சிரித்தார். சிரித்தார்..சிரித்தார்..
அதன்பிறகு கொஞ்சம் பொறுமையாகக்கேட்க நானும் விரிவாகபதிற்கூறினேன்.
தேர்வுகள் முடிந்தபின்னர் எல்லோரும் டெல்லியை சுற்றிப்பார்ப்பாகத்திட்டம்.
தாஜ்மஹால் வரையிலும் போவதாகத்திட்டம்.
என்னிடம் அந்தளவிற்குபணமில்லையென்பதால் வரவில்லையென்று மறுத்துவிட்டேன்.
அப்புறம் எனக்காகவந்திருந்த என் ஆசிரியர் கிருஷ்ணன்சார்தான் எனக்கானசெலவையுமேற்றுக்கொண்டார்கள்.
அங்கேசென்றுவிட்டு விடுதிக்குவந்திறங்கியபோது இரவு பத்தரையிருக்கும்.
அன்று ரிஸல்ட்வருகிறநாளென்பதால் ஒரேயோர் ஆசிரியர்மட்டும்
ரிஸல்ட்டுகளை வாங்கிவைப்பதற்காகவேண்டி அங்கேயேயிருந்தவிட்டார்.
பேருந்திலிருந்து இறங்கியவுடன் எல்லோரும் அவரை சூழ்ந்துகொள்ள
அவர் வெற்றிபெற்றமாணவர்களின்பெயர்களை அறிவித்தார்.
எட்டுபேரில் மூன்றுபேர்மட்டும் தத்தமது பிரிவில் முதல்மதிப்பெண்ணெடுத்திருந்தோம்.
அதிகபட்சமாக நான் 642/650 எடுத்திருந்தேன்.
என்வாழ்வில் மறக்கமுடியாதநாட்களில் அந்தநாளுமுண்டு.
உடனடியாக தொலைபேசிமையத்திற்குவந்து ஊருக்கு ஃபோன்செய்தேன்.
முதல்ரிங்கில் யாருமேயெடுக்கவில்லை.
நண்பர்களெல்லோரும் பேசிமுடித்தபின் திரும்பவும் முயன்றேன்.
நல்லவேளையாக ஃபோனையெடுத்தார்கள்.
விஷயத்தை அவர்களிடம் சுருக்கமாகச்சொல்ல அவர்கள் அம்மாவை அழைத்துவிட்டிருந்தார்கள்.
சேதியைச்சொன்னவுடன் தெருவே சந்தோஷமாகியிருக்கும்போல.
அப்பாவிடமும் நண்பர்களிடமும் சொல்லிவிடும்படி சொல்லிவிட்டு விடுதிக்குவந்தபோது தூக்கமேவரவில்லை.
அப்பாவைப்பார்க்கவேண்டுமென்றுதோன்றியது.
அடுத்தநாள் பர்சேஸைமுடித்துவிட்டு அப்படியே ரயில்வேஸ்டேஷனுக்குப்போவதாகப்பேசிக்கொண்டார்கள்.
கையில் தொண்ணூறுரூபாயிருந்தது.
அதில் அப்பாவிற்காக எழுபதுரூபாய்க்கு ஸ்வெட்டரொன்று வாங்கிக்கொண்டேன்.
அவ்வளவுதான் என் பர்சேஸ்.
இரண்டுநாட்களுக்குப்பிறகு காரைக்கால்வந்திறங்கியபோது
மாலைநேரவெயில் மங்கிக்கொண்டிருந்தது.
ஊருக்குச்சென்று பேருந்திலிருந்திறங்கியபோது
அப்பா சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.
வீட்டிற்கு பூவும் நூறுமிக்ஸரும் வாங்கிக்கொண்டு அப்பாவுடன் பெருமையாகநடந்துவந்தேன்.
மீதிக்காசு மூன்றுரூபாய் பேண்ட்பாக்கெட்டில் சிரித்துக்கொண்டிருந்தது.
வீட்டிற்கு வந்ததும் எல்லாக்கதைகளையும் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அந்த ப்ரொஃபஸர் ஆங்கிலத்திற்பேசியதை ஹிந்தி என்று தவறுதலாய்ப்புரிந்துகொண்டதையுஞ்சொன்னேன்.
எல்லோரும் விழுந்துவிழுந்துசிரித்தோம்.
அடுத்த இரண்டுநாட்களில் அப்பாவின் நண்பரொருவரிடமிருந்து அப்பா எடுத்துவந்திருந்தார்கள்.
"ரெஃபிடெக்ஸ் ஈஸி இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம்".
அதுதான் அப்பா...!
ஆயிரமாயிரம் சாட்சியங்களிருந்தும்
இன்னும்
ஆவணப்படுத்தப்படாமலேயேயுள்ளது
தாயன்பிற்குநிகரான
தந்தையர்தம் பாசம்.
- ஃபீனிக்ஸ் பாலா
"அனுபவம்ஸ்"