"நீயும் வாடா குட்டி!"
சுருக்கமான, உருக்கமான ஒரு கதை.
ஒரு வீட்டு வாசலில், 'இங்கு நாய்க் குட்டிகள் கிடைக்கும்' என்ற அறிவிப்பு இருந்தது.
கேட் வழியாக ஒரு குட்டிப் பையன் எட்டிப் பார்த்து, வீட்டுக்காரரைக் கூப்பிட்டான். அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.
'அங்கிள்! எனக்கு ஒரு நாய்க் குட்டி தருவீங்களா?'
'இதெல்லாம் ஒஸ்தி நாய். உன்னிடம் அத்தனை காசு இருக்குமா?'
'என்னிடம் எட்டணா இருக்கிறது!' என்றான்.
'போதாதே' என்றார் ஓனர்.
'சரி, நாய்க்குட்டிகளை நான் பார்க்க வாவது பார்க்கலாமா?' என்றான்.
அவர் வீட்டுக் கதவைத் திறந்து விசில் அடிக்க, சந்தோஷப் பந்துகளாக மூன்று நாய்க்குட்டிகள் சிறுவனை நோக்கி ஓடி வந்தன. அவனைப் பார்த்து வாலாட்டி, அவன் முகத்தை நக்கிக் கொடுத்தன.
சற்று தூரத்தில் நான்காவது நாய்க் குட்டி, இதைச் சோகமாகப் பார்த்துக் கொண்டு இருந்தது.
'நீயும் வா குட்டி' என்று சிறுவன் அழைக்க, 'அது பிறந்ததிலிருந்தே ஓட முடியாது. யாரும் வாங்க மாட்டார்கள்' என்றார் வீட்டுக்காரர்.
'எனக்கு அதுதான் அங்கிள் வேண்டும். என்னாலும் ஓட முடியாது' என்றான் சிறுவன், தன் சக்கர நாற்காலியில் இருந்து!
- சுஜாதா
(கற்றதும்... பெற்றதும்... - ஆனந்த விகடன் 01-10-06)

0 comments:
Post a Comment