Saturday, 25 April 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


"சிறுகதை" - துளிர். அந்த ஒற்றையடிச் செம்மண் பாதைக்குள் சைக்கிளைத் திருப்பிய குமா...

Posted: 25 Apr 2015 04:04 AM PDT

"சிறுகதை" - துளிர்.
அந்த ஒற்றையடிச் செம்மண் பாதைக்குள் சைக்கிளைத் திருப்பிய குமாரசாமிக்கு 65 வயதுக்கு மேலிருக்கலாமென்று அவருடைய தோற்றம் சொன்னது. உழைப்பினால் உரமேறிய தேகம், இந்த வயதிலும் மிதிவண்டியிலேயே எங்கும் சென்றுவரும் கடின உழைப்பாளி.
குமாரசாமி அந்தக் கிராமத்தின் விவசாயி. பரம்பரையான விவசாய நிலம் அவருக்கு இருந்தது. ஆணும், பெண்ணுமாய் இரு பிள்ளைகள்.
பெண்ணைப் பக்கத்து ஊரில் திருமணம் செய்துகொடுத்துவிட்டார். மகன் மோகனுக்கு சிறுவயதிலிருந்தே விவசாயத்தில் ஈடுபாடில்லை.
சேறு, சகதிக்குள் நான் வேலை செய்யமாட்டேன் என்று பிடிவாதமாய்ப் படித்து முடித்த கையோடு சிங்கப்பூரிலும் வேலை ஒன்றைத் தேடிக்கொண்டு சென்றுவிட்டான்.
மகனிடம் தன்னுடைய ஆசையைக் கூற மனமில்லாமல் பேசாது இருந்துவிட்டார் குமாரசாமி.
இப்போது அவரால் முன்னைப் போல் அதிகமாக கழனியில் வேலைசெய்ய முடியவில்லை. தள்ளாமை, யாருக்கு உழைக்கவேண்டுமென்ற வெறுமை அவரை நிலத்தை விற்றுவிடலாமென்ற முடிவுக்கு வரவைத்தது. மனைவியின் கெஞ்சலையும் பொருட்படுத்தாமல் டவுனிலிருந்த ரியல் எஸ்டேட்காரரிடம் நிலத்தை வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டுத் தான் இப்போது திரும்பிக்கொண்டிருக்கிறார்.
அந்தச் செம்மண் சாலைக்குள் திரும்பியதும் கண்ணில்படுவது அவரின் வயல்தான். அறுப்பு முடிந்த வயல் அடுத்த நடுதலுக்காய்க் காத்துக்கிடந்தது. கரகரவென்று கண்ணில் நீர் சொரிய ஆரம்பிக்க, சைக்கிளை விட்டிறங்கி மேல்துண்டால் கண்களைத் துடைத்துவிட்டு, வயலைப் பார்த்தபடியே வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
எதிரில் வரும் தணிகாசலத்தைப் பார்த்துவிட்டு என்ன இவ்வளவு தூரம் வந்திருக்கே தம்பி என்று கேட்டதும்,
அண்ணே உங்க வீட்டுக்குத் தான் போய்ட்டு வாறேன் இவன் என்னோட அண்ணன் பையன் கதிரவன்.. பட்டணத்துல படிச்சுப் போட்டு வயக்காட்டுல வேலை செய்யப் போறானாம்.
உங்களுக்கே தெரியும் நானே குத்தகை நிலத்துல வாழ்க்கையை ஓட்டுறவன். திடுதிப்புன்னு நிலத்துக்கு எங்க போக.. அதாண்ணே உங்க நினைப்பு வந்திச்சு உங்களுக்கும் தள்ளாமை. இவ்வளவு காலம் நமக்குச் சோறு போட்ட தாய்பூமி. அவளைக் காயப்போடாம, என் அண்ணன் பையனுக்கு குத்தகைக்குக் குடுத்திடுங்கண்ணே..
அவனுக்கும் தொழில், உங்களுக்கும் வருமானம், அதுக்கும் மேலா, பெரிய படிப்பும் விவசாயத்துல படிச்ச இவனை போல பசங்களுக்கு நாம ஒரு சந்தர்ப்பத்தைக் குடுக்கலாமே. என்ன சொல்றீங்கண்ணே.
ஒரே மூச்சாய்ப் பேசி முடித்த தணிகாசலத்தைக் கண்கலங்கப் பார்த்த குமாரசாமி விருட்டென்று சைக்கிளையும் கைவிட்டுவிட்டு கதிரவனை வாஞ்சையாக அணைத்துக் கொண்டார்.
தம்பி, உன்னைப் போல இளம்பசங்க இந்தமாதிரி வயக்காட்டு வேலைக்கு வரணும். பரந்துபோய்க் கிடக்குது நிலம், நீச்சு. பயன்படுத்தத் தான் ஆளில்லாம.
இனி எனக்குக் கவலையில்லை. இந்த வயக்காடு என்னைக்கும் வறண்டுகிடக்காது என்ற நம்பிக்கை உன்னைப் பார்த்ததுக்குப் பிறகு வந்திருக்கு.
இது உன் சொந்த நிலம். நல்லாப் பார்த்துக்கோ. வியர்வை சிந்து. அன்னை உனக்கு பொன்னாய்த் தருவா. நாற்றை நட்டு நாட்டை உயர்த்து. சொல்லிக்கொண்டு ஒரு இளைஞனின் உற்சாகத்தோடு சைக்கிளை எடுக்கும் போது பொட்டென்று ஒரு மழைத்துளி அவர்மேல் விழுந்தது.
இப்போதும் கண்ணில் நீர்.. ஆனால் அது துக்கத்தினால் அல்ல!
இன்றைய சில இளைஞர்கள் விவசாயம் பக்கம் தங்கள் கவனம் திருப்பி இருப்பது நாளைய விடியலுக்கான புது துளிர்.

நன்றி : புவனேஷ் மகேந்திரன்

பா விவேக்

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்..... 1. தண்ணீர் நிறைய குடியுங்கள். 2. காலை உணவ...

Posted: 24 Apr 2015 06:45 PM PDT

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

நன்றி : புவனேஷ் மகேந்திரன்

பா விவேக்

0 comments:

Post a Comment