அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த ஒரு ஆள் தான் வேலைக்கு பார்க்கும் இடத்திற்கு தினமும் போய் வர மொத்தம் 37கி.மீ ஆகுமாம். முறையான அரசுப் போக்குவரத்து வசதி இல்லாததால் அவர் அந்த 37கி.மீ.ல், 33கி.மீ.ஐ நடந்தே கடக்கிறார் தினமும். கார் வாங்கவும் அவரிடம் காசு இல்லை. சமீபத்தில் இந்தச் செய்தி ஒரு லோக்கல் செய்தித்தாள் மூலம் அமெரிக்கா முழுவதும் பரவியது.. அவ்வளவே தான்..
அடுத்த ஒரு வாரத்தில் அவருக்கு 80000$ நிதியுதவி கிடைத்தன நாடு முழுவதிலும் இருந்து. அவர் ஏரியாவில் இருக்கும் ஒரு ஆட்டோமொபைல் கடைக்காரர் அவருக்கு 'ford taurus' வண்டியை இனாமாகக் கொடுத்திருக்கிறார். அதை விட மிக முக்கியம், லோக்கல் அரசாங்கப் பிரதிநிதி, "இது போல் தினக்கூலி வேலை பார்க்கும், கார் வாங்க வசதி இல்லாமல் இருக்கும் ஆட்கள் தங்கள் வேலைக்குப் போய் வர ஏதுவாக அரசாங்கம் பஸ் விட முயற்சி எடுக்கும்" என்றிருக்கிறார்..
அமெரிக்காவில் அரசுப் போக்குவரத்துத் துறையை, திட்டமிட்டு காலி செய்தவர்கள் தனியார் வாகன உற்பத்தியாளர்கள் என்பது இந்த இடத்தில் தேவைப்படாவிட்டாலும் தெரிந்து கொள்ள வேண்டிய கொசுறு..
இப்போது அப்படியே உங்கள் கற்பனை குளோப் உருண்டையை லேசாகச் சுற்றி, டெட்ராய்டில் இருந்து நம் நாட்டின் மராட்டிய மாநிலத்தில் ஒரு குக்கிராமத்திற்குக் கொண்டு வாருங்கள். இங்கு தினமும் அதிகாலை 3மணிக்குப் பெண்கள் மூன்று குடங்களை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் கோதாவரி ஆற்றுப் படுகைக்குச் சென்று, கைகளால் தோண்டி, ஒரு ஊற்றை உருவாக்கி, கிடைக்கும் கலங்கிய தண்ணீரை எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டிற்கு வரும் போது மணி9 ஆகியிருக்கும்.
ஒரு நாளைக்கு, ஒரு குடும்பத்திற்குக் குடிக்க மட்டும் தான் அந்த மூன்று குடங்கள் ஆகும். குளிப்பது எல்லாம் வாரத்திற்கு ஒரு முறை தான். மாலை பள்ளி விட்டதும் மாணவர்களும் தாங்கள் பள்ளிக்கு எடுத்துச் சென்றிருக்கும் குடத்தில் வழியில் கிடைக்கும் தண்ணீரை அள்ளிக்கொண்டு வர வேண்டும். ஆடு, மாடுகளுக்குக் கொடுக்கக் கூட தண்ணீர் இல்லாத கிராமத்தில் அவற்றை என்ன செய்யலாம்? குடும்பத்தில் ஒருவராக இருக்கும் அவைகளாவது நன்றாக இருக்கும் என்று பாதி விலைக்கு (சிலர் ஓசிக்கே) விற்று விடுகின்றனர். அங்கு ஒரு ஜோடி பசுமாட்டின் விலை 20,000ரூபாய் தான். இது அந்த ஒரு கிராமம் என்றில்லை, வானத்தையும் பூமியையும் மட்டுமே நம்பியிருக்கும் பல இந்தியக் கிராமங்களின் நிலையும் இது தான்..
இப்போது நான் முதலில் சொன்னதையும் இதையும் ஒப்பிட்டுப்பாருங்கள். அங்கு ஒரே ஒரு மனிதனுக்கு ஏற்பட்டக் கஷ்டத்தை ஒரு சமுதாயமே தீர்க்க முனைந்தது. அரசாங்கமும் தன் பொறுப்பை உணர்ந்து உறுதி அளிக்கிறது. இங்கு பாதி கிராமங்கள் இப்படித்தான் இருக்கின்றன.. ஆனால் என்ன செய்ய? ஒரு சமுதாயமாக நம்மாலும் அவர்களுக்கு உதவ முடியாது. உதவ வேண்டிய அரசாங்கமோ, ஆடு மாட்டைக் கூட வேண்டாம் என நினைக்கும் அவர்களின் நிலங்களைப் புடுங்க காத்திருக்கிறது.. வக்கத்தவனாக இருந்தாலும், அமெரிக்காவில் இருந்தால் தான் மதிப்பு போல...

0 comments:
Post a Comment