தென் ஆப்ரிக்கா நாட்டில் தொடரும் இந்திய அரசின் மொழித் தீண்டாமைக் கொள்கை !!
தமிழர்கள் அதிகம் வாழும் தென் ஆப்பிரிக்கா நாட்டில் 2008 ஆம் ஆண்டில் இந்திய தூதரகம் தமிழ் மொழி இலவசமாக கற்றுத் தரப்படும் என அறிவித்தது. பல தமிழர்களும் இதனால் பயனடைந்து வந்துள்ளதாக தெரிகிறது.
இப்போது இந்திய தூதரகம் இதற்கு நேர்மாறாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இந்தி மொழி இலவசமாக கற்றுத் தரப்படும் என்றும், தமிழ் மொழியை கற்க வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது இந்திய தூதரகம். இந்த அறிவிப்பை எதிர்த்து தென் ஆப்ரிக்கா தமிழ்ச் சங்கம் இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்திய அரசு என்பது இந்தி மொழிக்கு மட்டுமே ஆன அரசு அல்ல . இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் இனங்களுக்கும் இந்திய அரசு சமமான உரிமையை கொடுக்க வேண்டும் என்று தென் ஆப்ரிக்கா தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . இந்தியை போலவே தமிழையும் இலவசமாக கற்றுத் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அனைத்தும் இந்தியை மட்டுமே ஊக்குவிக்கின்றன. அண்மையில் ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகம் தனது முகநூல் பக்கத்தில் இந்தியில் கட்டுரை போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தி அல்லாத மக்கள் இப்பக்கத்தில் சென்று இந்தி அல்லாத மொழிகளுக்கும் அறிவிப்புகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் . ஆனால் அக்கோரிக்கை எதற்கும் தூதரகம் பதில் அளிக்கவில்லை.
இப்படியாக இந்திய அரசின் தூதரகங்கள் அனைத்தும் இந்தி மக்களுக்கான, இந்தி மொழிக்கான தூதரகமாக மட்டுமே செயல்படுகிறது. பிற இந்திய மொழிகளை பயன்படுத்துவதை இந்திய அரசு விரும்பவில்லை. இக்காலத்திலும் மொழித் தீண்டாமை கொள்கையை இந்திய அரசு கடைபிடிப்பது மிகவும் அவமானகரமான செயலாகும் .
தமிழக அரசு உடனே இவ்விடயத்தில் தலையிட்டு தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அனைத்து நாட்டு இந்திய தூதரகத்திலும் தமிழை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கெல்லாம் தமிழர்கள் செறிந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களையே தூதரக அதிகாரியாக இந்திய அரசு நியமிக்க கோரிக்கை வைக்க வேண்டும். முடிந்தால் தமிழக அரசே, தமிழக அரசின் சார்பில் தமிழர்களுக்கான அயல்நாட்டு துறையை உருவாக்க முன்வர வேண்டும்.

0 comments:
Post a Comment