ஊரும் ருசியும் - நாகர்கோவில் ரசவடை!!
ரசம்..... தமிழர்களுக்கு தலை வாழை விருந்து வைத்தால், கண்டிப்பாக ரசம் இருந்தாக வேண்டும். மிளகும், வாசனையும் நிறைந்த அதை குடித்தால்தான் ஜீரணம் நன்றாக இருக்கும் என்று இரண்டு கரண்டியை கையில் வாங்கி சர்ரென்று உறிஞ்சினால்தான் அந்த உணவிற்கே மரியாதை ! வீட்டில் மதியம் சாப்பிட வாங்க என்று குரல் வரும்போது, எழுந்து சென்று எல்லா பாத்திரத்தையும் பார்த்தால் பருப்பு, கூட்டு, தயிர், வத்தல் குழம்பு, பொரியல் என்று எல்லாமே சிறிது திட வடிவத்தில் இருக்கும்போது, இந்த ரசம் மட்டும் ஓரமாக தண்ணீராக இருக்கும், அதை கரண்டியில் எடுத்து ஆற்றி விளையாடுவோம், பல நேரங்களில் சாம்பார் முடிந்து மோர் சென்று விடுவோம்.... ரசம் என்பதை பலர் தவிர்த்துவிடுகின்றனர் ! இந்த ரசத்தை சூடாக ஆவி பறக்க இறக்கி வைக்கும்போது அதன் மேலே மிதக்கும் கொத்தமல்லி, கருவேப்பிலை, பூண்டு ஒரு விதமான சுவையை கொடுக்கும், ஒரு டம்ப்ளரில் வாங்கி கொஞ்சம் உறிஞ்சினால் காரமும், சுவையும், மணமும் மீண்டும் சுவைக்க தூண்டும், அப்படிப்பட்ட ரசம் நாகர்கோவிலில் கிடைக்கிறது!!
நம் மனிதர்களுக்கு வடை என்பது வாழ்வின் ஒரு பகுதி எனலாம் ! டீ கடையில் பொன்னிறமாக போடப்பட்டு இருக்கும் மெது வடையும், பிரவுன் நிறத்தில் மின்னும் பருப்பு வடையும் கடித்துக்கொண்டே டீ சாப்பிடுவது என்பது நமது கலாசாரம். அந்த வடைகளையே சாம்பார் வடை, தயிர் வடை என்று சாப்பிடுவது கலாசாரத்தின் வளர்ச்சி, பெரும்பாலும் இந்த சாம்பார் மற்றும் தயிர் வடைகளை எல்லா கடைகளிலும் சாப்பிடலாம், எங்கும் கிடைக்கும்.... ஆனால் இந்த ரசவடையை மட்டும் வெகு சில கடைகளில் மட்டுமே கிடைக்கும். ரசத்தையும், வடையையும் விரும்பும் ஒருவருக்கு அது கிடைத்தால் எப்படி இருக்கும் ?!
நாகர்கோவிலில் கிட்டத்தட்ட பத்து ஹோட்டல் சென்று அங்கு ரச வடை மட்டுமே உண்டுவிட்டு வந்தேன், அதில் மிக சிறந்தது என்று ஹோட்டல் கௌரி சங்கர் ரசவடையை சொல்லலாம் !! வடசேரியில் இருக்கும் கௌரி சங்கர் ஹோட்டல் செல்ல யாரை கேட்டாலும் வழி சொல்வார்கள், நாகர்கோவிலில் நான்கு கிளைகள் இருக்கின்றன. ரச வடை என்று ஆர்டர் செய்தோம், ஒரு பெரிய வட்டிலில் சூடாக இருக்கும் ரசத்தில் இரண்டு மெது போண்டாக்களை மிதக்க விட்டு, சுற்றிலும் கடுகு மற்றும் கொத்தமல்லி மிதக்க கொண்டு வந்து வைக்கிறார்கள். ஒரு சிறிய கரண்டியில் கொஞ்சம் ரசத்தை எடுத்து குடிக்கும்போதே தெரிந்துவிடுகிறது இன்னொன்று சொல்ல வேண்டும் என்று, மிதக்கும் போண்டாவை அந்த கரண்டி மூலம் கொஞ்சம் பியித்து எடுத்து அதில் ரசத்தை மேலே ஊற்றி குளிக்க வைத்து ஒரு வாய் எடுத்து வைக்க, அந்த வடையின் சிறிய மொறு மொறுப்பும், ரசத்தின் வாசனையும் காரமும் என்று ஒரு அருமையான ருசியை கொடுக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக போண்டாவை விட ரசம் அதிகம் காலி ஆகிறது, இப்போது சர்வரை பார்க்க அவர் புரிந்துக்கொண்டு கொஞ்சம் ரசத்தை போண்டாவின் மீது ஊற்ற அவரை நன்றியுடன் பார்த்து டிப்ஸ் எக்ஸ்ட்ரா என்பதை பார்வையில் உருதிபடுதுகின்றோம். அந்த போண்டா ஊற ஊற முடிவில் ரசகுல்லாவை போல் நொதிந்து அதை சாப்பிடும்போது..... யார் சொன்னா ஸ்வீட் மட்டுமே இப்படி ரசித்து சாப்பிட முடியும் என்று ?
மெதுவடை பிரியர்களுக்கு கௌரி சங்கர் ஹோட்டல் ரசவடை என்றால், பருப்பு வடை பிரியர்களுக்கு நாகர்கோவிலில் எங்கு திரும்பினாலும் பருப்பு ரசவடை கிடைக்கிறது. சில ஹோடேல்களில் ஒரு சிறிய வட்டிலில் கிடைத்தாலும், பெரும்பாலும் ரசத்தில் இருந்து இலையில் எடுத்து வைக்கிறார்கள்!! இப்படி அல்லவா கவனிக்க வேண்டும் வடை பிரியர்களை!!
நாகர்கோவில் செல்பவர்கள் மறக்காமல் சாப்பிடவேண்டிய சுவையான உணவு இது, எந்த ஹோட்டல் சென்றாலும் இந்த ரசவடை கிடைக்கும், ஆகவே மிஸ் செய்யாதீர்கள்!!
நன்றி : சுரேஷ் குமார்

0 comments:
Post a Comment