Monday, 5 January 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணங்களும், கருத்துக்களும் எனது தனிப்பட்ட வா...

Posted: 04 Jan 2015 07:12 PM PST

இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணங்களும், கருத்துக்களும் எனது தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்டவை, யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த பதிவு எழுதப்படவில்லை.

நான் இன்னும் சில மாதங்களில் முதுகலை பட்டதாரியினை முடிக்கப் போகும் ஒரு இளைஞன். சுமார் 18 ஆண்டுகள் பள்ளி, கல்லூரி என வெவ்வேறு இடங்களில் படித்துள்ளேன், ஆனால் அரசியலைப் பற்றி ஒரு சிறு விஷயம் கூட தெரியாது, இதை கூறுவதற்கே எனக்கு அவமானமாகத்தான் உள்ளது. என்னோட படித்த நண்பர்களுள் ஒருவன் அரசியல் பற்றி தெரிந்தால்தான் வாழ்க்கையில் எதாவது சாதிக்க முடியும் என்று அன்றே கூறினான், ஆனால் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவனை பார்த்து சிரித்தோம். ஆனால் இன்று அரசியலின் முக்கியத்துவம் எனக்குப் புரிகிறது. இவ்வளவு ஆண்டுகள் படித்திருந்தும், அரசியலின் அடிப்படை பதவிகள் பற்றி கூட தெரியாத நிலையில் இருக்கிறேன்.

நான் தான் இப்படி என்றால் என் பின்னால் வரும் தலைமுறையோ என்னை மிஞ்சியவர்களாக இருக்கிறார்கள். வெளிநாட்டில் ஒரு நாளுக்கு முந்தி வெளிவந்துள்ள செல் ஃபோனைப் பற்றியும், தமிழ்நாட்டில் ஆறு மாதங்கள் கழித்து வெளிவரப் போகும் படங்களின் தலைப்பை ஆராய்வதிலும் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம், அவர்களின் சட்டமன்றத் தொகுதியில் வென்றவர் யார் அங்கு தற்போது ஆட்சி புரிவது யார் என்று கேட்டால் தெரிவதில்லை. இவர்களுக்கு எப்படி நம் தமிழ்நாட்டின் நிலையினைப் பற்றி தெரியப்படுத்துவது, எப்படி விழிப்புணர்வினை ஏற்படுத்துவது என்று எனக்குள் நானே கேள்விக்கேட்டுக் கொண்டிருந்தேன்....

நான் நியாயவிலைக் கடையின் வரிசையில் நின்று பொருள் வாங்கும்போது, மதிப்புமிக்கவர்கள் சாதாரணமாக வந்து தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு மக்களுக்கு ஒதுக்கியுள்ள பொருட்களில் சிலவற்றை கூடுதல் மதிப்பு கொடுத்து வாங்கும்போது, அரங்கமே அதிரும் அளவிற்கு சத்தம் போட்டு தட்டிக்கேட்க வேண்டும் எனத் தோன்றும். ஆனால் எதற்கு வீண் வம்பு என்று வாயை மூடிக்கொண்டு நின்று விடுவேன். அந்த வரிசையில் நான் மட்டுமல்ல, என்னைப் போன்ற படித்தவர்கள், படிக்காதவர்கள், பெரியவர்கள், சிறியவர்கள், ஆண், பெண் என அனைவரும்தான் இருப்போம். எல்லோரும் தமக்குள்ளேயே பேசிக்குள்வோமே தவிர யாரும் முன்வந்து கேட்கமாட்டோம். நியாயவிலைக் கடை பெயரில் மட்டுமே நியாயம் உள்ளது. அங்குள்ள பொருட்களை எப்படி அளந்து போட்டாலும் ரசீதில் போட்டுள்ள அளவுப் பொருளை சரியாக வாங்கவே முடியாது. 20 கிலோ அரிசி கிடைக்கவேண்டிய இடத்தில் 19.5 கிலோ அரிசி கிடைத்தால் ஆச்சரியப்பட்டு இன்றைய நாள் நல்ல நாள் என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான். இதற்கு நாம் ஒருநாள் அதில் கணக்கு எழுதபவராக சேர்ந்தால்தான் சரிவரும் என்று கூட எண்ணத் தோன்றும். ஆனால் அதை எப்படிச் செய்வது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்....

வெளிமாநிலத்தில் இருந்து நம் மாநிலத்திற்கு கல்விக்காக படையெடுக்கும் மாணவர்களை இலக்கு வைத்து பிடிக்கும் பல கல்லூரிகள் உள்ளன. அவர்களால் இன்றைய ஆரம்பக்கல்வி நிலையும் பணம் கொடுத்து பெற வேண்டிய இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, நான் கல்லூரி படிப்பிற்கு ஒரு ஆண்டுக்கு கட்டிய பணத்தினை தற்போதைய சமுதாயம் ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு கட்டிக்கொண்டிருக்கிறது. ஏன் நானே பின்னாளில் என் குழந்தைக்கு இப்படித்தான் செய்ய வேண்டிவருமோ? இதை எப்படி மாற்றுவது என்று எண்ணிக்கொண்டிருந்தேன்...

தமிழர்களின் பெருமைகளை இணையத்தில் எங்கு பார்த்தாலும் உடனடியாக நமது பக்கத்தில் பதிவிட்டு அது தமிழர்களைப் போய்ச் சேர்ந்துவிடும் என்று எண்ணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இப்படி எத்தனை நாட்கள் தமிழர்களின் வரலாற்று சாதனைகளையும், வீரத்தையும் போற்றிக்காப்பது, தற்காலத் தமிழர்களின் நிலை என்ன? அவர்களை சாதனை படைப்பவர்களாக மாற்றுவது எப்படி? உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுக்களுக்கு அவர்களை தயார்படுத்துவது எப்படி? இது போன்ற பல கேள்விகள் தினமும் என்னுள் வளர்ந்துகொண்டே இருக்கிறது....

இதைப்போல இளைஞர் சமுதாயம் முன்வர வேண்டும் என பல திரைப்படங்கள் வந்தபோதிலும், அவற்றின் கருத்துக்களைப் பற்றி பேசிக்கொண்டு மட்டும் தான் இருக்கிறோம். அதை ஏன் இந்த முறை உண்மையாக்கிக் காட்டக்கூடாது. மூன்று மணி நேரம் பார்க்கும் திரைப்படத்தில் நடக்கும் செயல்கள் நல்லவையாக இருக்கும்பட்சத்தில் அவற்றை ஏன் உண்மையான வாழ்வில் செய்யக்கூடாது........

இதுவரை நான் என் குடும்பம், என் வீடு, என் அப்பா, என் அம்மா என்று இருந்துவிட்டேன். இனிமேலும் இது தொடரவும் செய்யலாம். ஆனால் என் போன்று ஏதாவது மாற்றங்கள் ஏற்படாதா? என நினைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு ஏதாவது சிறிதாவது உதவ வேண்டும். அதனடிப்படையில் நான் கண்ட முகப்புத்தக வலைப்பக்கம்தான் 'இளைய தலைமுறை', எனது அனைத்து எண்ணங்களின் பிரதிபலிப்புகள் அங்கு பதிவாக எழுதப்பட்டிருந்தன. எதிர்கால தமிழர்களின் நிலையினை வலுப்படுத்த இளைஞர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? என இவர்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கூறலாம் என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறேன். இவர்களைப் பற்றி இந்த லிங்கின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்...

https://www.facebook.com/TN.ilayathalaimurai

அரசியல், தேர்தல் என்றாலே விலகி ஓடும் இளைஞர்களில் ஒன்றாக நான் இருக்க விரும்பவில்லை. என்னைப் போலவே எண்ணும் 'தமிழர்' எனும் உணர்வு கொண்ட இளைஞர்களை மண்டியிட்டு அழைக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். அதனால்தான் ஒரு நண்பனாக தமிழர்களின் தோளில் தட்டி அழைக்கின்றேன். வாருங்கள் நமது தமிழ்நாட்டின் மொத்த பலத்தினையும் காட்டுவோம். ஒரு தனியாளாக நின்றால் எளிமையாக நம்மை அழித்துவிடுவார்கள், ஆனால் தமிழரெனும் இனமாக நம் மாநிலத்தில் எழும்போது ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது.

நமது மாநிலத்திலுள்ள 32 மாவட்டங்களையும் சேர்த்து சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர், ஆனால் நமது முகப்புத்தக வலைப்பக்கத்தில் ஒரு லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். அதனால் இந்தச் செய்தியினை நீங்கள் அந்த 6 கோடி மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என நம்புகிறேன். ஒரு லட்சம் பகிர்வுகள் நடந்தால் கண்டிப்பாக அது பாதி மக்கள் தொகையிடமாவது சென்று சேர்ந்துவிடும். இது ஒரு சாதாரண முயற்சி மட்டுமே, வெற்றி கண்டால் கொண்டாடுவோம்.... இல்லையென்றால் அடுத்த கட்ட முயற்சியை எடுப்போம். ஒரு நாளும் முயற்சியினைக் கைவிடமாட்டோம்.

தமிழ் சார்பில் முகப்புத்தக வலைப்பக்கங்கள் வைத்திருக்கும் பிற அன்பர்களும் இவர்களுக்கு கைகொடுக்க முன்வருவார்கள் என நம்புகிறேன். தமிழர்களை முன்னேற்ற நினைப்பவர்களுக்கு நாம் உதவி செய்யவில்லை என்றால் யார் முன்வருவார்?

அகிலத்தையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்கள் வாழ்ந்த பெருமைமிக்க இடத்தில் வாழும் நாம், நம் மாநிலத்தையே முன்னேற்ற முடியாமல் போய்விடக்கூடாது என்று உங்களைப் போலவே நினைக்கும் சாதாரண இளைஞன்,

பா விவேக்


0 comments:

Post a Comment