ஏன் கடவுளுக்கு இத்தனை உருவங்கள்? -
ஒருவர் வீட்டுக்கு போகிறோம். அந்த வீட்டு சுவற்றில் பல படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீட்டுக்காரர் வந்து, இதுதான் என்னுடைய தகப்பனார் படம் என்று ஒரு படத்தைக் காட்டுகிறார். அதற்கு பின்னால் ஒரு பெண்ணோடு இருப்பவர் படத்தைக் காட்டி, இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார்.
அதற்குப் பின்னால் ஆணும், பெண்ணும், ஒரு குழந்தையுடன் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னர் விருத்தாப்பியப் பருவத்தில் ஒருவரும், கல்யாண கோலத்தில் இருக்கிற ஒரு ஆணும், பெண்ணும் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார்.
அதற்குப் பின்னால் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். இவ்வளவையும் பார்த்துக் கொண்டு வருகிறவர் உனக்கு எத்தனை தகப்பனார் என்று கேட்கலாமா?,அப்படிக் கேட்பவன் அறிவுடையவன் ஆவானா?
முதல் படம் இவன் தகப்பனார் வாலிபனாக இருந்தபோது எடுத்த படம்.அடுத்த படம், இவனுடைய தாயை, தகப்பனார் கல்யாணம் செய்து கொண்ட போது எடுத்த படம். அடுத்தது, இவன் குழந்தையாகப் பிறந்த போது எடுத்த படம். அடுத்து இவனை மண அறையில் மனைவியோடு தகப்பனார் ஆசீர்வாதம் செய்கிற படம்.
அடுத்தது இவன் பெற்ற குழந்தையைத் தகப்பனார் கொஞ்சுகிற படம்.ஒரே தகப்பனார் பல காலத்தில் பல உருவில் இருக்கிறார்.
அதுப்போலவே இறைவன் பல கால சுழற்சியில் பல உருவங்களை பெறுகிறார்.
- பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்.----- 21.2.1957, காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து:...
V.Rajamaruthavel

0 comments:
Post a Comment