பெரியார் மண்ணை கைப்பற்றத் துடிக்கும் காவி கும்பல்..!
------------------------------------------------------------------------------------------------------
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு சில நாட்கள் இருக்கும். யாரோ ஒரு நண்பரிடமிருந்து என் போன் நம்பர் வாங்கி பேசிய பெரியவர் ஒருவர் என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.
சொன்னபடியே அபிராமி மாலுக்குள் வந்து அமர்ந்திருந்தார். நல்ல உயரம். வயது ஒரு 70 இருக்கும். ஆனால் தளர்ச்சியடையாத உடல்.
பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் சுயவிபரம் கூற ஆரம்பித்தார். பிரபலமான கம்யூட்டர் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், போதும் போதும் எனும் அளவுக்கு பணம் சம்பாதித்துவிட்டதாகவும், இப்போது தனக்கு பிடித்த விசயங்களை செய்வதாகவும் தெரிவித்தார்.
மனைவி உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், தனக்கும் ஆஸ்த்துமா பிரச்னை இருப்பதாகவும் சொன்னவர் என்னை சந்திக்க வந்ததன் காரணம் குறித்து பேச ஆரம்பித்தார்.
``உங்களுக்கு மோடியை பிடிக்குமா" என்று எடுத்தவுடன் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு என் முகம் பார்த்தவரிடம் அந்த கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல்.. ``என்ன விசயமோ" என்று சிரித்தபடி கேட்டேன்.
``கடந்த பத்து ஆண்டுகள் ஆட்சியில் காங்கிரஸ் நாட்டை சீரழித்துவிட்டது. இப்போது பிஜேபி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் நான் மோடிக்கு ஆதரவாக என்னால் முடிந்த வேலைகளை செய்யப்போகிறேன்" என்றவரிடம்,
``நீங்கள் பிஜேபி கட்சியில் ஏதேனும் பொறுப்பில் இருக்கிறீர்களா.. " என்று கேட்டேன்.
இல்லை.. நான் மோடியின் அனுதாபி.. இதற்கு முன் இருந்த பிஜேபியின் தலைவர்கள் போல அல்ல.. மோடி.. நிறைய புதுமைகளை செய்யக்கூடியவர்.. நாட்டுக்கு நிறைய நல்லது செய்வார் என நம்புகிறேன். அதனால் நானும் என் போன்ற அனுதாபிகளும் சேர்ந்து ஒரு இணையதளம் தொடங்கியிருக்கிறோம். அதில் கார்ட்டூன் பிரச்சாரம் செய்வதற்கான பொறுப்பை நான் எடுத்திருக்கிறேன்.
அது சம்பந்தமாக தான் உங்களை சந்திக்க வந்தேன். எனக்கு நீங்கள் மோடியை ஆதரித்து கார்ட்டூன்கள் வரைந்து தர வேண்டும்" என்றவர்,
``ஒரு கார்ட்டூனுக்கு வழக்கமாக நீங்கள் வாங்கும் தொகையை விட கூடுதலாக நீங்கள் விரும்பும் தொகையை தருகிறேன்.. பணம் பிரச்னை இல்லை.. " என்றார். (பணம் ஒரு பொருட்டு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தி சொன்னார்.)
``இல்ல சார்.. மன்மோகனை விட மோடி மீது எனக்கு அதிக விமர்சனம் உண்டு. அதனால் அவரை ஆதரித்து கார்ட்டூன் போட முடியாது.. மோடிக்கு ஆதரவாக கார்ட்டூன் வரையக்கூடியவர்கள் யாராவது இருந்தால் உங்களை தொடர்பு கொள்ள சொல்கிறேன்.. " என்றபடி அவரை வழியனுப்பி வைத்தேன்.
அந்த பெரியவர் அப்படி சொன்ன தருணத்தில் நான் மிகுந்த பண நெருக்கடியில் இருந்தேன். அந்த பெரியவர் கேட்டபடி மோடிக்கு ஆதரவாக கார்ட்டூன் வரைந்து கொடுத்து என் பணத்தேவையை பூர்த்தி செய்திருக்கலாம். ஆனால் திட்டமிட்டு குஜராத்தில் வேட்டையாடப்பட்ட குழந்தைகளின் ரத்தமும்.. மனசாட்சியும் அதற்கு இடம் கொடுக்காது.
அந்த பெரியவருடனான உரையாடலை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம்.. மோடி கும்பலின் மார்க்கெட்டிங்க் யுக்தியும்.. ஊடகப்போரும் எப்படி செயல்படுத்தப்படும் என்பதை அறிந்து கொள்வதற்காக தான்.
பிஜேபி கட்சியில் இல்லாத ஒரு பெரியவர், எந்த லாப நோக்கும் இல்லாமல் தானே முன் வந்து மோடிக்காக தன்னால் முடிந்த வேலையை செய்கிறார்.
ஊடகப்போர் தந்திரங்களில் ஒன்று இது. இது தான் பிற சமூக மக்கள் கற்றுக் கொள்ள வேண்டியது. என்னதான் ஒருவன் களத்தில் மக்கள் போராளியாக இருந்தாலும் ஊடகக்காரர்கள் நினைத்தால் ஓவர் நைட்டில் அவனை தீவிரவாதியாக்க முடியும்.
ஏனெனில் களத்தில் நிற்கும் சொற்ப மக்களுக்கு மட்டுமே அவன் போராளி என்பது தெரியும். களத்துக்கு அப்பால் நிற்கும் பெருந்தொகையான மக்கள் ஊடகங்கள் கட்டமைக்கும் பிம்பத்தை தான் நம்புவார்கள். அப்படிதான் ஈழமும் பிரபாகரனும் வீழ்த்தப்பட்டார்கள்.
காவிகள் நான் கடுமையாக விமர்சிக்கும் கும்பல் தான் என்றாலும் அவர்களது மீடியா மார்க்கெட்டிங் யுக்தியை ஆய்வு செய்தால் ஆச்சர்யமாக இருக்கும்
அதிகமில்லை.. ஒரு மூன்றாண்டுகள் தான் உழைத்தார்கள். அதற்கென ஒரு டீமை செட் பண்ணினார்கள். இணையத்தை தான் முதலில் கைப்பற்றினார்கள். ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அடுத்த தலைமுறையினர் அதிகம் உலாவும் எல்லா களத்தையும் பயன் படுத்தி குஜராத்தை சொர்க்கலோகம் என்றார்கள். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மை என நம்ப வைத்தார்கள்.
ஏற்கனவே காங்கிரஸ் களவாணிகளின் பத்தாண்டு ஆட்சியால் பரிதவிப்புக்குள்ளான மக்களுக்கு ஊடகங்களில் திரும்ப திரும்ப ஒளிபரப்பட்ட மோடி என்ற சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் டைப் சாகஸ கதைகள் சுகமாக இருந்தது.
விளைவு மோடி கும்பலே எதிர்பாராத அளவுக்கு பெரும்பான்மையை அளித்து ஆட்சியில் அமரவைத்துவிட்டார்கள்.
அந்த சூப்பர் மேன் மோடி தான் இப்போது `` யூ.. நோ.. ரிவிட்டு மாமு.." என்று ஓட்டுப்போட்ட மக்களுக்கு ரிவிட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்.
காங்கிரஸ் மீதான எரிச்சல் மோடியை நிச்சயம் வெற்றி பெற வைக்கும் என்பது பரவலாக எல்லோரும் கணித்திருந்ததுதான். ஆனால் இவ்வளவு பெரும்பான்மை வெற்றி என்பது மோடி கூட எதிர்பாராததாக தான் இருந்திருக்கும்.
மோடி கும்பலின் மார்க்கெட்டிங் யுக்தியை கணித்ததனுடாக வேறொன்றையும் கணித்திருந்தேன். அது தமிழகத்தை அவர்கள் கைப்பற்றுவதற்கான வேலைகளை தீவிரப்படுத்துவார்கள் என்பதே.
தேர்தலுக்கு முன்பு, மாற்று சிந்தனை தோழர்களுடனான உரையாடலின்போது இந்த கருத்தை தெரிவித்திருக்கிறேன். ``அப்படியெல்லாம் நடக்காது தோழர்.. அவங்களே பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சிகளை சமாளிக்க திணறுவாங்க.. இதுல எங்க தமிழகத்தை குறிவைப்பாங்க" என்றே கூறிவந்தனர்.
ஆனால் இன்று மீடியா சாகஸ சூப்பர் மேன் தனது படைப்பரிவாரங்களுடன் தாரை தப்பட்டையுடன் ஆர்ப்பாட்டமாக பெரியாரின் தனித்துவமான மண்ணுக்குள் நுழை ஆரம்பித்துவிட்டார் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் மூலம் காணமுடிகிறது.
மோடியின் அரசியல் இடைஞ்சலாக இருந்த சீனியர்களை ஓரங்கட்டுவதோடு முடியவில்லை. மாநில கட்சிகளின் செல்வாக்கையும் ஒடுக்க வேண்டும் என்பது தான்.
மகாராஷ்டிராவில் 45 ஆண்டுகால நட்பு கட்சியான சிவசேனாவின் சங்கறுத்து அதிகாரத்தை கைப்பற்றிய நிகழ்வு ஒன்று போதும் மோடியின் அரசியல் புரிவதற்கு.
அந்த வகையில் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனித்த சிறப்பும் போர் குணமும் கொண்ட, எல்லா தேசிய இனங்களையும் அடிமைப்படுத்திய இந்தியையும் இந்துத்துவத்தையும் ஓட ஓட விரட்டிய பெருமை கொண்ட,
தேசியக் கட்சிகளை ஒடுக்கி மாநிலக் கட்சிகள் ஆதிக்கத்துடன் இருக்கும் தமிழகத்தை கைப்பற்ற வேண்டும் என்பது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இந்து என்றால் திருடன் என்றும், பரதேசி பண்டாரக் கட்சி என்று விமர்சித்து கொண்டே வாஜ்பாய் என்ற நல்லவர் (:)) ஆட்சியில் அதிகாரத்தை ருசித்த கருணா இப்போது 2G- ஆப்பில் வசமாக மாட்டிக் கொண்டு முழிக்கிறார். அதற்காக நான் உங்களின் அடிமை தான் என்பதை காட்ட அவ்வப்போது ஜெயாவுக்கு முந்தியே மோடியை பாரட்டி அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்..
தமிழகத்தின் மற்றொரு பெரிய கட்சியான அதிமுக-வின் தலைவி ஊழல் வழக்கில் சிறை சென்று தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில், வழக்கிலிருந்து விடுதலையானாலேப்போதும் என்று மோடியின் கருணைப் பார்வைக்காக காத்திருக்கிறார்.
இவ்விரு கட்சிகளுக்கு மாற்றாக அதிகாரத்தை கைப்பற்றும் தலைமை வேறு கட்சிகளில் இல்லை. இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது காவிகளின் தந்திரம்.
அதற்கு தான் ரஜினி.. விஜய் என நடிகர்களின் முகமூடியை மாட்டிக் கொண்டு வரப் பார்க்கிறார்கள்.. மீனவர்களுக்கு தூக்கு என்ற நாடகத்தை அரங்கேற்றி பின்னர் அதை ரத்து செய்து போராளி வேடம் கட்டுகிறார்கள்..
அது நாடகம் என்பதை உணர்ந்து கொண்டிருக்க வேண்டிய அடுத்த தலைமுறையோ மோடிஜி வந்தா எல்லாம் சரியாகிடும்.. மோடிஜீக்கு.. ஜே.. என்று இணையத்தில் உளறிக் கொண்டிருக்கிறது.
இந்த புதிய தலைமுறைக்கு தமிழர்களின் போராட்ட வாழ்வையும், தனித்த பெருமையும், மொழி உணர்வையும் வளர்த்திருக்க வேண்டிய அதிகாரத்திலிருந்த திமுக அதிமுக என்ற திராவிட கட்சிகள் அதை செய்யாமல் மழுங்கடித்ததன் விளைவே இந்த மோடிஜீக்கு ஜே.. கோஷம் கேட்க வேண்டிய கொடுமை ஏற்பட்டிருக்கிறது..
பகுத்தறிவு மாநிலமாக தனித்த பெருமையுடன் இருந்த தமிழகத்தில் இனி குண்டுகள் வெடிக்கக்கூடும்.. திட்டமிட்டு மதக்கலவரங்கள்.. உருவாக்கப்படலாம்.. தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் ரத யாத்திரைகளினாலும்.. மதக்கலவரங்களினாலுமே.. அதிகாரத்திற்கு வந்தவர்கள் அவர்கள்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா

0 comments:
Post a Comment