பரிணாம வளர்ச்சியில குரங்குல இருந்து மனுசன் வந்தான்னு சொன்னா... அப்ப ஏன் இப்ப இருக்குற குரங்குல இருந்து மனுசன் வரலைன்னு கேக்குறவங்களைப் பாத்தா எனக்கு அழுகுறதா சிரிக்கிறதான்னு தெரியலைங்க....
பரிணாமங்குறது... ஓவர்நைட்லயோ அல்லது ஒரே பாட்டுல பணக்காரனாகுறது மாதிரியோ கிடையாதுங்க. சிலபல மில்லியன் வருடங்கள் ஆகும். இன்னொன்னையும் கவனிக்கனும். பரிணாம மாற்றத்துக்கு உட்படுற உயிரினங்கள் எதுன்னு பாத்தா... சூழலுக்குத் தகுந்த தங்களை தக்கவைத்துக்கொள்ள முடியாத உயிரினங்கள்தான் அப்படி மாறும்.
இன்னைக்கு இருக்குற குரங்குகள் நம் தற்போதைய புவிச்சூழலுக்கு ஏத்த மாதிரி வாழப் பழகிக்குச்சுங்க. அதுனால அது பரிணாம மாற்றம் அடைய வேண்டியதில்லை. அதாவது தேவையும் சூழலும்தான் பரிணாம மாற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள். புரிஞ்சுக்குங்க.
அப்புறம்.. மனிதன் தோன்றியது... குரங்குகள்ல இருந்துன்னு சொன்னா... இன்னைக்கு இருக்குற குரங்குகள்ல இருந்து இல்லை. கொரில்லா, சிம்பன்ஸி, போனபோ, அப்புறம் மனுசன் இவங்களுக்கெல்லாம் ஒரு பொது மூதாதையர் உண்டு. அதுல இருந்து கிளை விட்ட இனங்கள்தான் இந்த நாலும்.
மனுசனும், டக்குனு... அந்த மூதாதையர்கிட்ட இருந்து இன்னைக்கு இருக்குற மனுசன் மாதிரி பொறந்து வந்துரலை. Homo habilis, Homo erectus, Homo antecessor, Homo heidelbergensis, Neanderthals, Homo rhodesiensis, Homo rudolfensis, Homo sapiens idaltu, Homo sapiens sapiensனு படிப்படியா.. தலைமுறை தலைமுறையா.. இன்னைக்கு 46 குரோமோசாம்களோட இப்ப இருக்குற ஒரு சராசரி மனுசக் கூட்டமா வந்துருக்கோம்.
மாற்றங்கள் வெளித்தோற்றத்துல மட்டும் இல்லைங்க. உடல் உள்ளுறுப்புகள், ஏன் நம்ம டிஎன்ஏ ஆர்என்ஏ..ல கூட மரபணுக்கள் மாற்றம் பெற்று வந்துருக்கோம். இன்னைக்கு இருக்குற இந்த Homo sapiens sapiens கூட ஒரே மாதிரி இல்லை. ஒவ்வொரு கண்டத்துலயும் இருக்குற மனுசன் எத்தனை வித்தியாசப்படுறான்?
அப்டீன்னா... பரிணாம வளர்ச்சி முடிந்துவிட்டதா..? மனிதன்தான் பரிணாமத்தின் உச்சியான்னு கேட்டா... இப்போதைக்கு உங்களைச் சமாளிக்கிறதுக்கு ஆமான்னும் சொல்லலாம். உண்மையச் சொல்லனும்னா இல்லைன்னும் சொல்லலாம்.
என்னைப் பொறுத்தவரை சூழலுக்குத் தகுந்து தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்காத ஒரே உயிரினம் மனுசன்தான். அவன்தான் தனக்கேற்றவாறு சூழலை வடிவமைக்க முயற்சி செய்யுறான். அதுனால கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க... நம்மகிட்ட இருக்குற பரிணாம மாற்றம் புலப்படும்.
கரடு முரடான பாதைகள்ல, மலைகள்ல, மரங்கள்ல ஏறிப்போகனும்னா வழுக்கி விழுந்துறாம இருக்க நம் கால் விரல்கள் அவற்றை இறுக்கிப் பிடிக்கும். அந்த விரல்கள் சற்றே உறுதியாக இருக்க விரல் நுனிகளில் நகங்கள்.
ஆனால் இன்னைக்கு செருப்பும் ஷூவும் போட்டுக்கிட்டு சமதளமான சீரான பாதையில நடக்குறதுக்கு... பழகிக்கிட்ட நமக்கு கால் விரல்களின் பயன்பாடு குறைஞ்சுருச்சு... அதுனால பயன்தராத விரல்களில் முதலிடத்துல இருக்குற சுண்டு விரல் இன்னைக்கு நிறைய சுருங்கிருச்சு.. சிலபேருக்கு அது தரையிலேயே படுறது இல்லை. அதுல இருக்குற நகம் கூட பலருக்கு ஒழுங்கா முழுசா வளர்றது இல்லை.
பலபேருக்கு... ஞானப்பல் முளைக்கிறதே இல்லை. என் தாத்தா காலத்துலயெல்லாம் நிறையப் பேருக்கு உடம்புல, கை கால்கள்ல முடி நிறைய இருக்கும். இப்ப அது தேவையில்லாமப் போச்சு. இன்னும் சில நூறு வருடங்கள்ல... நாம பிறக்கும்போதே வழுக்கையோட பிறந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை.
இது உடல்ரீதியான பரிணாம மாற்றம். இன்னொன்னு... அறிவு. அறிவியலார்களின் கருத்துப்படி அடுத்த வரப்போற சூப்பர் ஹ்யூமன் அறிவால பரிணாம மாற்றம் பெற்றவனா இருப்பானாம். இதெல்லாம் கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் ஆற அமர்ந்து உட்கார்ந்து யோசிச்சாலே புரிஞ்சுரும். நம்ம பாட்டன் காலத்துல அறிவு எப்படி இருந்துச்சு... இன்னைக்கு நம்ம பசங்க காலத்துல அறிவு எப்படி இருக்குன்னு...
பரிணாமங்குறதை... நீங்களும் நானும் ஒக்காந்து பேசிலாம் டக்குனு ஒரு முடிவுக்கு வரமுடியாதுங்க... படிக்க ஆரம்பிச்சா... விக்கிரமாதித்தன் கதைய விட படுபயங்கரமா... கதைக்குள் கதை, கதைக்குள் கதைக்குள் கதைன்னு... இங்கே கிளைக்குள் கிளை, கிளைக்குள் கிளைன்னு... சுவாரஸ்யமா பிரிஞ்சு போகும்...
அதுனால..., கேள்வி கேளுங்க தப்பில்லை. ஆனா, இத்தனை காலங்கள் காடு மேடு, கடல் தீவுன்னு அலைஞ்சு திரிச்சு, ஆதாரங்கள் சேகரிக்கப் பாடுபட்டு... ஒரு கருத்துச் சொன்னா... என்ன ஏதுன்னு அதைப் படிச்சுப் பாக்காமயே... எங்க வாத்தியாரு அது பொய்யின்னு சொன்னாரு... அதுனால அது பொய்தான்னு சொன்னா எப்டீங்க...?
உங்க வாத்தியாருக்கு என்ன பிரச்சனையோ... உங்க அறிவைப் பலிகடாவா ஆக்கிட்டாரு. நீங்களாச்சும் சுதாரிச்சுக்க வேணாமா...?
கேள்வி கேளுங்க... உங்க அறிவை வளர்த்துக்குறதுக்காக கேள்வி கேளுங்க... அடுத்தவங்களைப் பொய்யாக்குறதுக்காக கேள்வி கேக்காதீங்க...
@Babu Pk

0 comments:
Post a Comment