அடப்பாவமே..! எனக்காக யாருமில்லையே!
மரணப்படுக்கையில் கிடந்த அவரைச் சுற்றிலும் உறவினர் கூட்டம் குழுமியிருந்தது. அவர் இனி பிழைக்க மாட்டார் என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவரது கட்டிலைச் சுற்றியும் மனைவி மக்கள், சொந்த பந்தங்கள் கண்ணீரும் கம்பலையுமாய் அமர்ந்திருந்தார்கள்.
கண் விழித்த அந்த மனிதர் லேசாக இருமினார். அழுது கொண்டிருந்தவர்கள் அமைதியாக அவரையே பார்த்தார்கள். அவர் சுற்றி பார்வையைச் செலுத்தி அடையாளம் கண்டு கொண்டார். தலையாலேயே சைகை செய்து அருகிலும் அழைத்தார்.
பக்கத்தில் வந்த தந்தையிடம், "அப்பா! நீங்கள் ஏன் அழுகிறீர்கள்..?" – என்று மெல்லியக் குரலில் கேட்டார்.
"மகனே! நீ போனபின் நான் தனி ஆளாகிவிடுவேனே? அதை நினைத்துதான் அழுது கொண்டிருக்கின்றேன்.' – என்று கண் கலங்கி நின்றார்.
"அம்மா, நீங்கள் ஏனம்மா அழுகிறீர்கள்?" – அம்மாவை அழைத்து கேட்டார்.
"வயதான காலத்தில் எங்களை காப்பாற்றுவாய் என்று நிம்மதியாய் இருந்தோம். இனி எங்களை யார் கவனித்துக் கொள்வார்கள்?" – அவரது அம்மா தேம்பி.. தேம்பி அழுதார்.
"நீ ஏன் அழுது புலம்பிக் கொண்டிருகிறாய்?"- என்று அவர் தனது மனைவியிடம் கேட்க,
"ஏங்க.. எம்பசங்களையும், என்னையும் அனாதையாக்கிட்டு போறீங்களே..! இனி எப்படி அவர்களைக் காப்பாற்றி ஆளாக்குவேன்!" – என்று தலையில் அடித்துக் கொண்டு அவர் அழ ஆரம்பித்தார்.
தனது குழந்தைகளை அருகில் அழைத்தவர், "கண் துடைச்சிக்குங்க செல்லங்களா! நீங்க ஏன் அழுகிறீங்க?" – என்று கேட்டார்.
"அப்பா, நாங்க கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தீங்க. இப்போ நீங்க சாமிகிட்ட போயிட்டீங்கன்னா.. நாங்க யார் கிட்ட கேட்கறது? எங்களின் ஆசையை யார் நிறைவேத்துறது?" – என்றான் வளர்ந்த பிள்ளை.
"அடபாவமே! என்னுடைய முழு வாழ்க்கையையும் குடும்பத்துக்காக அர்ப்பணித்து உழைத்தேன். இன்றைக்கு மரணப்படுக்கையில் இப்போதோ… அப்போதோ என்று கிடக்கும் நான் இனி திரும்பி வர முடியாத இடத்துக்கு செல்லப் போகிறேன். அங்கே எனக்கு என்ன நடக்கப் போகிறது? எனக்காக என்ன காத்திருக்கிறது? என்று கவலைப்படாமல் என்னுடைய பிரிவுக்காகவும் அழாமல் அவரவர் தேவைகளை எண்ணி அல்லவா அழுது கொண்டிருக்கிறார்கள்!" – என்ற கவலையிலேயே அவர் நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டார்.
#ஆன்மிகச்_சிந்தனை

0 comments:
Post a Comment