சமற்கிருதம் போன்ற அந்நிய மொழிகளில் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைத்து விட்டு தமிழர்கள் கூறும் காரண்ங்களை சகிக்க முடியவில்லை......
"சூரியன் போல் வெளிச்சம் தருபவன்" என்று பொருள் தருவதால் இந்த பெயரை என் மகனுக்கு வைத்தேன்.
"இசையை போல் இன்பமானவள்" என்று பொருள் தருவதால்
இந்த பெயரை என் மகளுக்கு வைத்தேன்"
என்று ஆளுக்கு ஒரு காரணம் கூறுகிறார்கள்.உண்மையில் இவர்களுக்கு தமிழில் பெயர் வைக்க விருப்பமில்லை என்பதே உண்மை.
"சூரியன்",பகலவன்,இசைப்ரியா,இசையரசி,இசைசெல்வி,
இளம்பிறை,இசையரசன்,தமிழ்செல்வன்,தமிழரசன்,
முழுநிலவன்,கோவேந்தன் என்று தமிழில் இல்லாத பெயர்களா....? மற்ற மொழிகளில் இருக்கப் போகிறது.
இன்று நூற்றுக்குத் தொண்ணூறு பேர் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில்லை. "நவீனத்தை நோக்கி நகர வேண்டாமா...?, பழைமையிலேயே ஊறிக்கிடப்பதா....?" என்று இளைஞர்கள் கேட்கின்றனர்.
சமற்கிருதப் பெயர்கள் ஒன்றும் புதுமையானவை அல்ல. அந்த மொழியும், தமிழைப் போலப் பழைமையானதுதான். அந்த மொழி யாருக்குத் தாய்மொழியோ, அவர்கள் அம்மொழியில் பெயர்சூட்டிக் கொள்ளட்டும்.
தமிழர்களே தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டவில்லையென்றால், ஜப்பானியர்களா தமிழ்ப் பெயர் சூட்டுவார்கள்....? நம் மொழியை நாம் மறப்பது, நம் முகத்தை நாமே சிதைத்துக் கொள்வது போலத்தான்!
இதற்கெல்லாம், 'மொழி வெறி' என்றும், 'குறுகிய மனப்பான்மை' என்றும், 'பழைமை வாதம்' என்றும் இலவசப் பட்டம் வழங்கும் இளைஞர்களின் ஒரு பகுதியினரை நோக்கி நாம் உரத்துச் சொல்ல வேண்டிய சில செய்திகள் உள்ளன.
தன் தாயை நேசிப்பது 'தாய்வெறி' அன்று. தன் தாயிடம் அன்பு காட்டுவதால், பிற தாய்களையெல்லாம் வெறுக்கிறோம் என்றும் பொருள் இல்லை.
இது தாய்க்கும் பொருந்தும், தாய்மொழிக்கும் பொருந்தும்.
நாம் எந்த மொழியையும் வெறுக்கவில்லை. மொழியில் உயர்வு, தாழ்வை நாம் கற்பிக்கவில்லை. அவரவர் தாய்மொழி, அவரவர்க்கு உயர்வான ஒன்றே....!
ஆதலால், தாய் மொழி பேணுதல் அனைவர்க்கும் அழகு......!

0 comments:
Post a Comment