+++++மரணிக்காது மரணித்த நண்பனுக்காக+++++
இருபது வருடங்கள் வகுப்பறை, புத்தகம், ஆசிரியன், நட்பு, பகைமை, குடும்பம், சமுகம், கற்றுத்தராத பாடங்களை இரண்டே வருடத்தில் சேலைன், ஊசி, ரத்தம், Abiraterone,Cytoxen,Keoxifene எனக்கு கற்றுத்தந்தது.
நான் ஒன்றும் அவ்வளவு பெரிய தைரியசாலியில்லை இரவில் வெளிக்கு போவதற்கு கூட அம்மாவை எழுப்பும் ஜாதி, இன்று மலையை புரட்டும் மன தைரியத்தை உணர்கிறேன்.
நோயை உறுதிப்படுத்திய அந்நாள் குருவிக்கூட்டில் இடிவிழுந்த நாள், அன்றிலிருந்து அம்மாவின் விழியோரம் ஈரமில்லாமல் நான் கண்டதில்லை, அன்றுவரை தங்கையின் இதழோரம் சிரிப்பில்லாமல் நான் கண்டதில்லை.
எனது வீட்டை நான் பார்த்து மாதங்களாச்சு, வீட்டுக்கு போகனும் என்று நான் கேட்கும் போதல்லாம் கிடைக்கும் பதில் கவலை படாதீங்க சீக்கிரமே போயிடுவீங்க, அர்த்தம் புரியாமலா என்ன.
படிக்கும் மேசையில் பங்கு கேட்டழுத தம்பிக்கு இனி அழ வேண்டியிருக்காது முழுதுமே அவனுக்கு தான்.
அலுமாரியின் இடுக்கில் 500 ரூபாய் நோட்டும் கடிதம் ஒன்றும் இருக்கும், பணத்தில் தங்கைக்கு சிவப்பு ரோஜா இட்ட கைப்பை ஒன்று வாங்கிக்கொடுங்கள், அவள் என்னிடம் ஆசைப்பட்டு கேட்டது.
கடிதம்! நண்பனுக்கு கிடைத்த காதல் கடிதம் அவனிடம் பறித்துக்கொண்டது, அதை திருப்பிக்கொடுத்துவிடுங்கள் அவனே மறந்திருப்பான்.
கனவுகள் கருகிய வாலிபனாய் நான் இன்னும் பலர் என்னுடன் யார் முந்தப்போகிறோம் என்ற ஓட்டத்துடன்,
கட்டில் காலியாகும் வரை பார்த்திருக்கும் ஒரு கூட்டம், அதிசயம் நிகழும் என காத்திருக்கும் ஒரு கூட்டம்.
இடக்கையில் குத்திய ஊசியை விட இலக்கத்தை சுற்றும் ஊசி வலிக்கிறது,
பெயர் கூப்பிடும் வரை காத்திருக்கிறேன் ..............!!
நன்றி:- ஷகீக் அஹ்மத்

0 comments:
Post a Comment