மெக்சிகோவில், செப்டம்பர் 26 ம் தேதி, 43 கல்லூரி மாணவர்கள் காணாமல் போயிருந்தனர். அவர்களின் இறந்த உடல்கள், தற்போது மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப் பட்டுள்ளன. போதைவஸ்து கடத்தல் கும்பல் ஒன்று அந்த மாணவர்களை கொலை செய்து புதைத்திருந்தது. இந்தத் தகவல் ஏற்கனவே பல ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டிருந்தது. பலர் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பார்கள்.
ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்காத தகவல் ஒன்றுள்ளது. இந்த மாணவர்கள் மெக்சிகோவில் "தீவிர இடதுசாரிகளின்" கோட்டையாக கருதப்படும் கல்லூரி ஒன்றை சேர்ந்தவர்கள். வறிய மாணவர்களின் கல்வி கற்கும் உரிமைக்காக போராட்டங்கள் நடத்தியவர்கள். அதனால், அவர்கள் காவல்துறையினரால் கடத்தப் பட்டிருந்தனர்.
மெக்சிகோ காவல்துறைக்கும், மாபியாவுக்கும் இடையில் தொடர்பு இருப்பது ஊரறிந்த இரகசியம். அதனால், பொலிஸ்காரர்கள், கிரிமினல் கும்பலுடன் சேர்ந்து அந்த மாணவர்களை கொன்று புதைத்திருக்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள்.
நேற்றைய தினம், மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் அகாபுல்கோ நகரில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட, பல்லாயிரக் கணக்கான மக்கள், மாணவர்களின் படுகொலை தொடர்பாக நீதி விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
Thanks: Kalaiyugam.

0 comments:
Post a Comment