`நீங்க பிராமினா.. Non பிராமினா' என்பது வெறும் கேள்வி அல்ல பாஸ்!
-------------------------------------------------------------------------------------------
கொஞ்சம் கூட எந்த வித கூச்சமும் இல்லாமல் பொதுவில் யாரேனும் யாரோ ஒருவரைப் பார்த்து கேட்கக் கூடிய கேள்வி ``நீங்க பிராமினா.. Non பிராமினா.. '' . பெரும்பாலும் வீடு வாடகைக்கு தேடி அலையும்போது இந்தகேள்வி தவறாமல் கேட்கப்படும்.
இப்படியான கேள்வியை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் எதிர் கொண்டிருக்கலாம். நானும் எதிர்கொண்டிருக்கிறேன்.
அவ்வப்போது இங்கு கொஞ்சம்பேர் தேவர், கோனார், பிள்ளைமார், செட்டியார், நாடார், பறையர் , பள்ளர், வன்னியர் நாங்கள் ஆண்டப் பரம்பரை என்று ஆரம்பிக்கும் காமெடியை காண்பதுண்டு.
அந்த ஆண்டப்பரம்பரை வீரர்கள் எல்லோரையும் ``பிராமினா.. Non பிராமினா " என்ற ஒற்றைக் கேள்வி இழிவுப் படுத்திவிடும்.
ஆனால் பாவம் நம் ஆண்டப்பரம்பரை வீரர்களுக்கு அந்த ஒற்றைக் கேள்வியில் இருக்கும் அரசியல் புரிவதில்லை.
எத்தனை சாதிகள் இருந்தாலும் சரி.. பிராமணர்களைப் பொறுத்தவரை அவர்களை தவிர மற்றவர்கள் எல்லோரும் கீழானவர்களே.
அதுதான் அந்த கேள்வியில் இருக்கும் அரசியலின் வெளிப்பாடு.
மகராஷ்டிராவில் பிழைப்பு நடத்தும் தமிழர்கள், ஒரு மராட்டியரைப் பார்த்து நீங்கள் தமிழரா.. Non தமிழரா என்று கேட்க முடியுமா.. மராட்டியரா.. மராட்டியர் அல்லாதவரா என்று குறிப்பிடுவதுதான் சரி.
அப்படி தான் பிராமினா.. Non பிராமினா என்ற கேள்வியும். நியாயப்படி அந்த கேள்வி ``நீங்க தமிழரா.. Non தமிழரா" அல்லது ``நீங்க திராவிடரா.. Non திராவிடரா" என்று தான் இருந்திருக்க வேண்டும்..
ஏனெனில் எப்போதும் அந்த மண்ணில் பெரும்பான்மை இனம் எதுவோ அதுதான் அடையாளமாக இருக்க முடியும். ஆனால் பிராமணர்கள் விசயத்தில் மட்டும் சிறுபான்மை தான் அடையாளமாக இருக்கிறது.
இந்துமதத்தின் படி நிலை சாதிய கட்டமைப்பின் படி பிராமணர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அடுத்த படிகளில் இருக்கும் எல்லோரும் கீழானவர்களே. ஆனால் கீழே இருப்பவர்கள் தான் தனக்கு கீழே இருப்பவர்களை `நான் தான் பெரிய சாதி' என்று ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் மேலே மிதித்துக் கொண்டிருப்பவனை பார்ப்பதில்லை.
காந்தியில் ஆரம்பித்து இந்து மதத்தில் சாதியை களைவோம் என்று அவ்வப்போது சீன் போடுபவர்கள் வருவார்கள்.. மண்டையைப் போடுவார்கள்..
ஆனால் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் சரி இந்துமதம் சாதியை கடந்து வராது.. ஏனெனில் படிநிலை சாதிய கட்டமைப்பு தான் அதன் முக்கிய அம்சமே.
இழிவு என்று பிராமணர்கள் கருதும் மாட்டுக்கறியை சாப்பிடும் வெள்ளைக்காரனிடமும், மாற்று மதத்தவனையும் சரி சமமாக நடத்துவார்கள். ஆனால் சொந்த மதத்தை சேர்ந்தவன் கீரை சாப்பிடுபவனாக இருந்தாலும் கூட சாதி பாகுபாடோடு தான் நடத்துவார்கள்..
இந்த படத்தில் சுப்பிரமணிய சாமிக்கும், குல்லா போட்ட பாய்க்கும் நாற்காலியை போட்ட `பெரிய அருவாள்' ஏன் தனக்கு ஒரு நாற்காலியை போடவில்லை என்ற கேள்வி `கும்புடுறேன் சாமி' என்று தரையில் அமர்ந்திருப்பவருக்கு வந்திருந்தால் அவர் காவி டவுசர் போட்டிருக்க மாட்டார்..
கருப்புச் சட்டைக்கு மாறியிருப்பார்..
அதுதான் பெரியார் கற்றுக் கொடுத்த சுயமரியாதை..!
-கார்ட்டூனிஸ்ட் பாலா
20-10-14

0 comments:
Post a Comment