ஆயா (அம்மாவின் அம்மா) எப்பவும் மகன் வீட்டு புள்ளையே விட... மக வீட்டு புள்ளேங்க மேலேதான் பாசம் அதிகமா இருக்கும். அம்மா, அப்பா சொல்றதை கூட சில சமயம் அந்த புள்ளேங்க கேட்கமாட்டாங்க. ஆனா ஆயா சொன்னா அந்த குழந்தை கேட்கும்...
ஏன் இப்படி... மகன் புள்ளேயே கவனிக்காம... மவ புள்ளேயே மட்டுமே கொஞ்சிக்கிட்டு இந்த கிழவிங்க இருக்காளுகன்னு தோணும். ஆனா இரு பேரப்புள்ளைக்கும் சமமாத்தான் அந்த கிழவி செஞ்சிருக்கும்.
ஒரு சமயத்தில் அந்த கிழவி செத்துப்போயிட்டா... எல்லோருமே அழுதாங்க. அந்த மவ வீட்டு பேரப்பயலும் ரொம்ப அழுதான்.
வருடங்கள் கடந்தது. அந்த பேரப் பய பெரியவனா வளர்ந்திட்டான். மருத்துவ கல்லூரி சென்று ஒரு மருத்துவ படிப்பும் படிச்சு முடிச்சுட்டான். ஒருமுறை அவன் மார்க், டிசி ஷீட் வாங்கி பார்க்கும் நிலை எனக்கு ஏற்பட்டது. அந்த மார்க் ஷீட் நுனியில்... ஒரு துணி பின்பண்ணி இருந்துச்சு. என்னடா இதுன்னு கேட்டேன்.
"யாருக்கிட்டேயும் சொல்லாதே மச்சான். இது ஆயா (அம்மாவின் அம்மா)வின் சேலைத்துணியின் முடிச்சு" என்றான்.
ஆயா... கஷ்டப்பட்டு வய வேலைக்கு போயிட்டு.... யாருக்குமே தெரியாம சில்லரை காசை இந்த துணியிலேதான் முடிஞ்சு வச்சிருக்கும். எனக்கு படிக்க இதிலிருந்துதான் காசு எடுத்து கொடுத்துச்சின்னு சொல்லிக்கிட்டு போயிக்கிட்டு இருந்தான்...
நான்தான் ரொம்ப நேரமா....
- சங்கர் அஷ்வின்

0 comments:
Post a Comment