சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன் ???
மனிதர்களுள் பலவகை மனிதர்களைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பலவீனமானவர்களாக இருப்பார்கள். இதில் உடல் பலவீனம் மட்டுமல்லாது, செயல்கள், பேச்சு மற்றும் நடவடிக்கைகள் என இன்னும் பல அடங்கும். இதில் கோபமும் ஒன்று.
கோபம் கடவுளைக்கூட விட்டுவைத்ததில்லை
முருகனே ஒரு சிறு பழத்திற்காக கோபம் கொண்டு பழநியில் சென்று ஆண்டியாக நிற்கும்போது நாம் ஏன் கோபப்படக் கூடாது என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. மக்கள் அனைவரின் மதங்களும், சமயங்களும் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டவையே. அந்த மதங்களிலும், சமயங்களிலும் கற்றுத்தேர்ந்த ஞானிகள் மற்ற சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் வாழ்க்கையின் அர்த்தங்களை புரிய வைப்பார்கள். அந்த வகையில் முருகனின் கோபத்தினை மையமாக வைத்து அதன் உட்பொருளை கூற வரும் கதையினை பலர் அறிவதில்லை.
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன் ???
இது இரு உலக நியதிகளை அரங்கேற்ற நடைபெற்ற நிகழ்வாக கூறப்படும் கதையாகும். இந்த நியதிகள் ஞானம் அடைதலின் இரண்டு வழிகளைக் கூறுகின்றன.
முதல் வழி
அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடத்தினை விட்டுச் சிறிதும் நகராது இருப்பது பிரம்மச்சரியம். இந்த பிரம்மச்சரியத்தினைக் காத்து நிற்பவர்தான் விநாயகர். தனக்கு இவ்வுலகைப் பற்றி கற்றுக்கொடுத்தவர்களிடம்தான் உலகம் உள்ளது என்று கருதுவதுதான் இந்த முதல் வழி.
இரண்டாவது வழி
உலக விஷயங்கள் அனைத்தையும் கற்று, அனைத்தும் தெளிவுற உணர்ந்து, அனைத்தையும் அனுபவித்து (உலகம் சுற்றி வந்த முருகன்) இறுதியில் அம்மை அப்பனிடம் சேர்வது இன்னொரு வழி. இது மிகவும் நீண்ட வழியாக இருந்தாலும், இந்த வகையில் நாம் கேட்கும் ஞானம் நமக்கு கிடைக்காமல் வேறொருவருக்கு கிடைத்துவிடும் (ஞானப்பழம்).
இதனால் நாம் கோபம் கொண்டு வேறெங்கும் ஓட வேண்டாம், அது ஏற்கனவே கடவுள் குறித்து வைத்த விஷயம் என்பதால், நாம் தேடிவந்த ஞானத்தினை வேறெங்கும் கிடைக்குமா என்று ஆய்வு செய்ய வேண்டும். அப்படி முருகன் செய்த ஆய்வின் விளைவுதான் பழநி மலைக் குன்றுகளில் மேற்கொண்ட பயணம். அதன் இறுதியில் தெரிய வருவதுதான் ஞானம் வேறெங்கும் இல்லை, நம்மிடம் தான் உள்ளது. அந்த ஞானப்பழம் நீயே!
இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் நாம் வாழ்க்கையில் எதையாவது ஒரு விஷயத்தினை தேடிச் சென்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். நமது முயற்சிகள் சரியாக இருந்தும் நாம் தோல்வியடையும்போது நமக்கு வரும் கோபங்களும், எரிச்சலும் நம்மையே அழித்துவிடும். அத்தகைய நேரங்களில் மனம் தளராது அடைய எண்ணிய பொருளை மெதுவாக ஆராய்ந்து பார்த்தாலே நாம் பெற்றுவிடலாம்.
இதுதான் முருகனின் கோபம் கூறும் செய்தி....
இனியாவது முருகனே கோபப்படும்போது நாம் ஏன் கோபம் கொள்ளக்கூடாது என்று எண்ணி உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்கள்.
பா விவேக்

0 comments:
Post a Comment