சீக்கியர்கள் தங்கள் தலைப்பாகையை (டர்பன்) கடவுளுக்கு இணையாக புனிதமாகக் கருதுபவர்கள். பொது இடமென்றும் பாராமல் அந்த புனிதமான தலைப்பாகையைக் கழட்டி ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மனித நேயமிக்க சீக்கியரை என்ன சொல்லிப் பாராட்டுவது?
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் தனது அக்காவுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன், திடீரென கார் மோதி தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தான். அப்போது, தனது வீட்டிற்குள்ளிருந்த சீக்கியரான ஹர்மன் சிங், காரின் பிரேக் சத்தத்தைக் கேட்டு பதறி அடித்துக் கொண்டு அந்த சிறுவனை நோக்கி ஓடினார். சற்றும் யோசிக்காமல் தனது தலைப்பாகையைக் கழற்றி அந்த சிறுவனின் தலையில் கட்டுப் போட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த சிறுவனின் உடல்நிலை முதலில் கவலைக்கிடமாக இருந்தாலும் தற்போது அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நியூசிலாந்து ஹெரால்டு பத்திரிக்கை ஹர்மன் சிங்கிடம் கேட்கையில் "நான் என் டர்பனைப் பற்றி யோசிக்கவில்லை. அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட காயத்தைப் பற்றியே நினைத்தேன். அவனது தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவனுக்கு உதவ வேண்டியது என்னுடைய கடமை" என்றார் ஹர்மன் சிங்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இதை புகைப்படம் எடுத்து "இந்த சீக்கிய வாலிபரை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று பேஸ்புக்கில் பதிவிட, பேஸ்புக்கில் அதி வேகமாக பரவி வரும் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் ஹர்மன் சிங்கின் மனித நேயத்திற்கு சல்யூட் அடிக்கின்றனர்.
- மாலை மலர் தமிழ்

0 comments:
Post a Comment